

புதுடெல்லி: ஆழ்கடல் ஆராய்ச்சியில் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை அருகே காட்டுப்பள்ளியில் சிறப்பு நீர்மூழ்கியில் 6,000 மீட்டர் ஆழத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடலுக்கு அடியில் பல்வேறு கனிமங்கள் உள்ளன. அவற்றை கண்டறிய அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் நாடுகள் ஆழ்கடல் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சியில் இந்தியா மிக குறுகிய காலத்தில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. மத்திய புவி அறிவியல் துறையின் சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு சமுத்திரயான் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி உள்நாட்டு தொழில்நுட்பத்தில் “மத்சயா - 6000” என்ற பெயரில் அதிநவீன நீர்மூழ்கி தயாரிக்கப்பட்டு உள்ளது.
இது, கடலுக்கு அடியில் 6,000 மீட்டர் ஆழம் வரை மூழ்கும் திறன் கொண்டது. இதில் 3 பேர் வரை பயணம் செய்யலாம். சென்னை அருகே காட்டுப்பள்ளி கடல் பகுதியில் அண்மையில் “மத்சயா - 6000” நீர்மூழ்கியின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஆட்கள் இல்லாமல் நீர்மூழ்கியை மட்டும் கடலில் இறக்கி நடத்தப்பட்ட இந்த சோதனை மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதுகுறித்து மத்திய புவியியல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஆழ் கடலில் நீரின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். அதாவது 400 பேருந்துகளை ஒன்றன் மீது ஒன்றாக ஒரு மனிதன் மீது அடுக்கி வைக்கும் எடைக்குச் சமமானது ஆகும். கடலுக்கு அடியில் சுமார் 1,000 மீட்டருக்கு கீழே சூரிய ஒளி இருக்காது. ரேடியோ அலையும் இருக்காது. எவ்வித தகவல் பரிமாற்றத்தையும் மேற்கொள்ள முடியாது. ஆழ்கடல் வெப்பநிலை எப்போதுமே உறைநிலையில் இருக்கும்.
இத்தகைய சவாலான சூழலில் ஆய்வு செய்ய `மத்சயா - 6000' சிறப்பு நீர்மூழ்கி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்மூழ்கி கடலுக்கு அடியில் செல்ல 4 மணி நேரம், அங்கு ஆய்வு மேற்கொள்ள 4 மணி நேரம், கடலுக்கு மேலே வர 4 மணி நேரம் என 12 மணி நேரம் ஆகும். தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி ராஜு ரமேஷ், இந்திய கடற்படை கமாண்டர் ஜதீந்தர் பால் சிங் ஆகியோர் பிரான்ஸ் நாட்டின் நீர்மூழ்கியில் அண்மையில் ஆழ்கடல் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அவர்கள் 5,000 மீட்டர் ஆழம் வரை நீர்மூழ்கியில் கடலில் மூழ்கினர். இந்திய விஞ்ஞானிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். இதன்பிறகு 2028-ம் ஆண்டில் “மத்சயா - 6000” நீர்மூழ்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆழ்கடல் ஆராய்ச்சியில் இறங்குவார்கள். மிக குறுகிய காலத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு இணையாக ஆழ்கடல் ஆராய்ச்சியில் இந்தியா முன்னேறி வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.