

புதுடெல்லி: டெல்லி துர்க்மேன் கேட் பகுதியில் உள்ள ஃபைஸ்-இ-எலாகி மசூதி மற்றும் அருகில் மயானத்தை ஒட்டியுள்ள இடத்தில் சிலர் சட்டவிரோதமாக கடைகள் மற்றும் கட்டிடங்களை கட்டியிருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் 30 புல்டோசர்களுடன் சென்று சென்று ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த சுமார் 150 பேர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். சிலர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை விரட்டியடித்தனர்.
சிலர் கைது செய்யப்பட்டு போலீஸ் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது அருகில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் குடியிருந்தவர்கள் பால்கனியில் நின்றபடி போலீஸாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் நேற்று பதற்றம் நிலவியது. இப்பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்தன.
மசூதியை இடிக்க போகிறார்கள் என தவறான தகவல் பரப்பப்பட்டதால், அங்கு பதற்றம் நிலவியதாக கூறப்படுகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அங்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப் படவில்லை.