புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கையை திருடியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமானால் ஆட்சி மாற வேண்டும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் நிதிமுறைகேடு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், “அயோத்தி ராமர் கோயில் காணிக்கையை திருடியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமானால் ஆட்சி மாற வேண்டும். தற்போதைய மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் திருடியவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த மாட்டார்கள். காணிக்கை திருடர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என விரும்பும் ராம பக்தர்கள் ஒவ்வொருவரும் அரசாங்கத்தை மாற்ற முன்வர வேண்டும்.
அவர்கள் ராமரை கடவுளாகக் கருதுவதில்லை. கருதியிருந்தால் திருடியிருக்க மாட்டார்கள். 21 மாநிலங்களில் ஆட்சி, மத்தியில் ஆட்சி என ராமர் அவர்களுக்கு அனைத்தையும் கொடுத்தார். குறைந்தபட்சம் அதற்காக அவர்கள் நன்றியுள்ளவர்களாகவாவது இருந்திருக்க வேண்டும். காணிக்கை திருட்டால் நாட்டில் உள்ள ஒவ்வொரு சனாதனியும் மன வேதனையில் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் முழு உண்மையும் இன்னும் வெளிவரவில்லை. அதிகாரத்துக்காகவும், பணத்துக்காகவுமே அவர்கள் சனாதனத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சி மட்டுமே சனாதனத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்ட கட்சி. பக்தர்கள் ஆன்மிக தலங்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். பஞ்சாபில் காளிக்கும், லவ குசவுக்கும் (ராமரின் மகன்கள்) கோயில் கட்டப்பட்டு வருகிறது. பஜனை நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ஏற்பாடுகளை செய்கிறோம். ஊழல் இல்லாத அரசை நாங்கள் மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாட்டில் சனாதனத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்ட ஒரே கட்சி ஆம் ஆத்மி மட்டுமே.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் அல்லது 891 நாட்கள் ஆகின்றன. இந்த இரண்டரை ஆண்டுகளில் நாட்டின் உள்துறை அமைச்சரான அமித் ஷா, ஒருமுறைகூட ராமர் கோயிலுக்குச் செல்லவில்லை. ராமரின் பெயரை தவறாகப் பயன்படுத்திய ஒரு நபர், ஒருமுறைகூட ராமர் கோயிலுக்குச் செல்லவில்லை. இது குறித்த நான் இணையத்திலும், சாட்ஜிபிடியிலும், பத்திரிகையாளர்களிடமும் விசாரித்தேன். ராமரின் பெயரால் 42 பொதுக்கூட்டங்களில் மக்களிடம் ஓட்டுக்களைக் கோரிய அமித் ஷா, ஒருமுறைகூட கோயிலுக்குச் செல்லவில்லை.
அமித் ஷாவிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். ராமர் கோயிலுக்கு நீங்கள் ஏன் செல்லவில்லை? ராமர் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையா? ராமரின் ஆசிர்வாதம் உங்களுக்குத் தேவையில்லையா? ராமரை கடவுள் என்று நீங்கள் கருதவில்லையா? நான் அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், அவர் ராமர் கோயிலுக்குச் செல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ராமர் கோயில் காணிக்கைகள் திருட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு தனது விசாரிணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.