

பெங்களூரு: “தேர்தலில் போட்டியிட்டால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ள சூழல் இன்று உருவாகியுள்ளது. அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதால், 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை” என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட் பகுதியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்தராமையா, ‘இன்றைய அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதால், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. இருப்பினும், அரசியலில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு, மக்களின் துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிக்கான குரலாகத் தொடர்ந்து ஒலிப்பேன்.
வருணா தொகுதி மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு என்னைக் கேட்டு வருகின்றனர். ஆனால், இனிவரும் காலங்களில் எந்தத் தேர்தலிலும் போட்டியிடக்கூடாது என்று நான் முடிவு செய்துள்ளேன். கடந்த காலங்களில் நான் தேர்தலில் போட்டியிட்டபோது, தொகுதி மக்களே எங்களுக்குத் தேவையான நிதியை வழங்கி எங்கள் வெற்றியை உறுதி செய்தனர். ஆனால் இன்று அத்தகைய சூழல் இல்லை.
எனக்கு இப்போது 79 வயதாகிறது. எங்கள் அரசாங்கத்தின் பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் எனக்கு 81 அல்லது 82 வயதாகிவிடும். எனது உடல்நிலை முன்பு இருந்ததைப் போல வலுவாக இல்லை. முன்பிருந்த அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது இனி சாத்தியமில்லை.
2028-ம் ஆண்டு வாக்கில் எனக்கு 82 வயதாகியிருக்கும். அது எனது அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஆண்டாக அமையும். 1978-ல் தாலுகா வாரிய உறுப்பினராக எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். தோல்விகளையும் வெற்றிகளையும் நான் கண்டுள்ளேன். ஆனால், நான் நம்பிய கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படாமலும், எனது மனசாட்சிக்குத் துரோகம் இழைக்காமலும் இருந்ததில் நான் மனநிறைவு கொள்கிறேன்.
தேர்தலில் போட்டியிட்டால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ள சூழல் இன்று உருவாகியுள்ளது. இன்று அரசியல் முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. நேர்மையான அரசியலுக்கு இடமில்லாத நிலை காணப்படுகிறது. இத்தகைய பின்னணியில், இனிவரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்துள்ளேன்.
50 ஆண்டுகளாக, மாநில மக்கள் என்னை அவர்களில் ஒருவராகக் கருதி அன்புடன் வழிநடத்தி வந்துள்ளனர். அந்த நன்றிக்கடன் என் மீது உள்ளது. எனவே, எனது எதிர்கால வாழ்க்கையும் பொதுச் சேவைக்கே அர்ப்பணிக்கப்படும்” என்று தெரிவித்தார்.