

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சினேகா கலிதா, டெல்லி காஜுரி காஸில் உள்ள வீட்டில் கணவரால் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார்.
இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகைப்பட ஆதாரங்களுடன் கடிதம் எழுதினார். அதில், இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும், குற்றம்சாட்டப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. டெல்லி காவல்துறை சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகி வாதாடினார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக காஜுரி காஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட நபர் கடந்த 25ம் தேதி இரவு கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மாமனார், மாமியார் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை உதவி காவல் ஆணையர் அல்லது துணை காவல் ஆணையர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரியை கொண்டு விசாரிக்க டெல்லி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது.