

மீரட்: உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரைச் சேர்ந்தவர் மயங்க் சிங். திருமணமான இவர் வேறொரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவருடன் அடிக்கடி வெளியில் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மயங்க் சிங்கின் மனைவி சுனிதா நேற்று முன்தினம் மாலை ஹாப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கணவர் மயங்க் அவரின் காதலி மஹி வர்மாவுடன் காரில் அமர்ந்து மோமோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து கடும் கோபமடைந்த சுனிதா, காரை நோக்கி ஆவேசமாக சென்றார். இதை கவனித்த மயங்க் காரின் கதவுகளையும், ஜன்னல் கண்ணாடிகளையும் மூடினார். சுனிதா கோபத்துடன் காரின் ஜன்னல்களை தட்டியதால், மயங்க் காரை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றார்.
இதையடுத்து, சுனிதா காரின் முன்பக்கம் சென்று அதன் பானெட்டின் மீது படுத்துக்கொண்டார். ஆனாலும் மயங்க் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். சுனிதா கார் பானெட்டில் தொங்கியபடி பயத்தில் அலறினார். இருப்பினும் மயங்க் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு காரை ஓட்டிச் சென்றார். பின்னர் அங்கு உள்ளூர்வாசிகள் அதிகளவில் திரண்டதால் அவர் காரை நிறுத்தினார். சுனிதா காயங்கள் எதுவும் இன்றி தப்பினார்.
இதனையடுத்து, அவர் தன் கணவர் மீது கொலை முயற்சி, வரதட்சணைக் கொடுமை மற்றும் துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் மயங்க் மற்றும் அவரது காதலி மஹி ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார், காரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, காரின் பானெட்டில் சுனிதா தொங்கியபடி சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.