

ஹுமாயூன் கபீர்
புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் இனி என்னைத் தவிர்த்துவிட்டு எவரும் ஆட்சி அமைக்க முடியாது என ஹுமாயூன் கபீர் தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டவரான இவர், முர்ஷீதாபாத்தில் பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டியவர். கடந்த டிசம்பர் 6-ல், முர்ஷிதாபாத்தின் பெல்தங்காவில் பாபர் பெயரில் புதிதாக ஒரு மசூதி கட்ட அடிக்கல் நாட்டியிருந்தார். இந்நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வந்ததால் அம்மாநில அரசியலில் ஹுமாயூன் கவனம் ஈர்த்தார்.
மேலும், வரும் டிசம்பர் 22-ல் ஒரு புதிய அரசியல் கட்சியை அறிவிப்பதாகவும் கபீர் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் சுமார் 29% முஸ்லிம்கள் இருப்பது எம்எல்ஏவான கபீரின் நம்பிக்கையாக உள்ளது.
இது குறித்து ஹுமாயூன் கபீர் கூறுகையில், ’மாநிலத்தின் முஸ்லிம் மக்களை தங்கள் பரம்பரைச் சொத்தாகக் கருதி, அவர்களை வாக்கு வங்கிகளாக டிஎம்சி பயன்படுத்துகிறது.
இனிமேல், முஸ்லிம்களை வாக்கு வங்கியாக இருக்க வேண்டாம், மாறாக அதிகார அரசியலில் ஒரு பங்குதாரராக இருக்க வேண்டும். நம் கட்சி 135 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. இம்மாநிலத்தின் 294 தொகுதிகளில் சுமார் 90 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களுக்கு செல்வாக்கு உள்ளது, அங்கு வாக்காளர் சதவீதம் 40 முதல் 70% வரை உள்ளது.
எனவே, அவர்கள் வாக்குகளால், என் கட்சி இந்த 90 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மீதமுள்ள 204 தொகுதிகளில் டிஎம்சி, காங்கிரஸ் மற்றும் பாஜகவினருக்கு இடையிலான மோதலில் யார் வென்றாலும் ஆட்சி அமைக்க என்னிடம் வந்தே தீர வேண்டும். என் கட்சியின் ஆதரவின்றி மேற்கு வங்க மாநிலத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. இன்னும் சில மாதங்களில் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். எனத் தெரிவித்துள்ளார்.
முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதியைக் கட்டும் அறிவிப்பை வெளியிட்ட ஹுமாயூன் கபீரின் பேச்சால் சர்ச்சைகள் கிளம்பின. இதைக் காரணமாக்கி அவர் திரிணமூலிருந்து முதல்வர் மம்தா பானர்ஜியால் நீக்கப்பட்டார்.
இருப்பினும், ஹுமாயூன் கபீரை சிறுபான்மையினர் வாக்குகள் பெற திரிணமூல், மறைமுகமாகப் பயன்படுத்துவதாக பாஜக குற்றம் சுமத்தி வருகிறது.
திரிணமூல் பதில்: கபீரின் அறிவிப்பின் மீது டிஎம்சியின் செய்தித் தொடர்பாளர் அருப் சக்ரபர்த்தி கூறுகையில், “முதலில் அவர் தனது சொந்தத் தொகுதியில் வெற்றி பெறட்டும். அவரது கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வைப்புத்தொகை கூட மிஞ்சாது. கனவு காணும் கபீர் தனது தூக்கத்திலிருந்து விழிப்பதற்குள், டிஎம்சி வெற்றி பெற்று, மம்தா பானர்ஜி நான்காவது முறையாக முதல்வராகி விடுவார்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையில், ஹைதராபாத்தின் எம்பியான ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுத்தீனுடன் கூட்டணி அவைப்பதாகவும் கபீர் அறிவித்திருந்தார். இவரது அறிவிப்பை ஏஐஎம்ஐஎம் நிராகரித்துள்ளது.
நிராகரித்த ஏஐஎம்ஐஎம்: இது குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தேசியச் செய்தி தொடர்பாளரான சயது அசீம் வக்கார் கூறுகையில், “கபீரின் புதிய கட்சியுடன் கூட்டணியையும் அமைப்பது பற்றி தற்போது நாம் சிந்திக்கவில்லை. ஏனெனில், அவருக்கு பாஜகவுடன் ரகசியத்தொடர்புகள் இருப்பதாகப் புகார்கள் உள்ளன. கபீரின் கருத்துக்களும் நடவடிக்கைகளும் அரசியல் ரீதியாக சந்தேகத்திற்குரியவை. நாம் இங்கு 135 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டு வருகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வங்காளத்தின் ஒவைசி: இந்நிலையில், கபீர் துவங்கும் புதிய கட்சியால் டிஎம்சிக்கு சிறுபான்மை வாக்குகள் சிதறும் எனக் கணிக்கப்படுகிறது. இந்த வாக்குகள் சிதறை இதர மாநிலங்களில் செய்து வரும் கட்சி தலைவருடன் கபீரை ஒப்பிட்டு அவர், ‘வங்காளத்தின் ஒவைசி’ எனக் குறிப்பிடப்படுகிறார்.