

பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த, மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை 50% அல்லது 272 அதிகரித்து 816 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது (இன்று முதல் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றச் சிறப்புத் கூட்டத்தொடரின்போது இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட உள்ளது). இந்த இடஒதுக்கீடு தற்போதைய மக்களவை உறுப்பினர்களைப் பாதிக்காது என்பதை இது குறிக்கிறது (ஏனெனில் 272/816 = 1/3 பங்கு).
மக்களவையின் எண்ணிக்கையை 50% அதிகரிக்காமலேயே, மக்களவையில் (சட்டப் பேரவைகளில்) பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நியாயமான முறையில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் இந்தக் கட்டுரையில் விளக்கப்படுகிறது. இருப்பினும், செயல்படுத்துவதற்கு மிக எளிதான, நியாயமான ஒரு திட்டமும் இக்கட்டுரை வழங்குகிறது.
543 ஆகவே தொடர்ந்தால்...
மக்களவையின் எண்ணிக்கையை இப்போது உள்ள 543-ஐ மாற்றாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, இடஒதுக்கீடு என்பது தற்போதுள்ள இடங்களுக்குள்ளேயே இருந்தாக வேண்டும். அதற்கான மாற்று அணுகுமுறைகள் பின்வருமாறு இருக்கலாம்:
1. தொகுதிகளின் சுழற்சி முறை இடஒதுக்கீடு: ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 181 தொகுதிகள் (543-இல் 1/3 பங்கு) பெண்களுக்காக ஒதுக்கப்படும். இந்த தொகுதிகள் ஒவ்வொரு தேர்தலிலும் சுழற்சி முறையில் மாறும். அப்போது பெண்களுக்கான தொகுதிகளில் ஆண்கள் போட்டியிட முடியாது. இந்த முறையின் ஒரு வடிவம் தற்போது 1992-ம் ஆண்டின் 73 மற்றும் 74-வது அரசியலமைப்புத் திருத்தங்களின்படி, பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான வார்டுகளைச் சுழற்சி முறையில் ஒதுக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அணுகுமுறையில் சில அபாயங்கள் உள்ளன. ஒன்று, இது பதவியில் இருப்பவர்களின் தொடர்ச்சியைப் பாதிக்கிறது. தொகுதியின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பைக் குறைக்கிறது. மேலும் இது பொறுப்புணர்வைக் குறைக்கலாம்.
2. இரட்டை உறுப்பினர் தொகுதிகள்: சில தொகுதிகள் ஒருவருக்குப் பதிலாக இரு எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்தல் முறையையே மாற்றி அமைக்க வேண்டியிருப்பதால் இதைச் செயல்படுத்துவது சிக்கலானது. தவிர, இத்தகைய யோசனைக்கு எதிரான வலுவான வாதம் என்னவென்றால், இது சமமற்ற தொகுதி பிரதிநிதித்துவத்துக்கு வழிவகுக்கும்.
3. கட்சி மட்டத்திலான வேட்பாளர் ஒதுக்கீடு: சட்டத்தின் மூலம் இதை நடைமுறைப்படுத்தலாம் (பாகிஸ்தானில் செயல்படுத்தப்பட்டுள்ளது). இதன்படி, அரசியல் கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 33% பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். இந்த முறை கட்சி கட்டமைப்புகளில் முறையான மாற்றத்தை ஊக்குவிக்கும். இருப்பினும், தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே இது அமைவதால், மக்களவையில் 33% பெண் எம்பிக்கள் இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது.
4. டாப்-அப் விகிதாச்சார இடங்கள்: தேர்தலுக்குப் பிறகு, இடங்களை உட்புறமாக சரிசெய்யலாம். அதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 14% ஆக இருந்தது. அது 33%-க்கும் குறைவு. இதுபோன்ற சூழ் நிலையில், கட்சிப் பட்டியல்கள் அல்லது நியமனம் மூலம் சில இடங்களை மீண்டும் ஒதுக்கலாம். இருப்பினும், இது இந்தியாவின் தற்போதைய ‘முதலில் வருபவருக்கே வெற்றி' (எப்பிடிபி) முறையைச் சிக்கலாக்கும்.
எனவே, மக்களவை எண்ணிக்கையை 543 ஆகவே வைத்துக்கொண்டு இந்த முறைகளில் எதைச் செயல்படுத்தினாலும் சிக்கல்கள் ஏற்படும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைமகளிர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கான 2-வது வடிவம், மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்து, விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை (பிஆர்) நிறுவுவதாகும்.
இருப்பினும், இந்த முறை தற்போதைய எப்பிடிபி முறைக்குத் துணையாக இருக்குமே தவிர, அதை மாற்றாது. தற்போதைய எப்பிடிபி முறையுடன் ஒரு பிஆர் அடுக்கையும் சேர்த்து, மூன்றில் ஒரு பங்கு பெண்களின் பிரதிநிதித்துவத்தை அடைவது சாத்தியமானது. இது மிகவும் எளிதானது. பிஆர் முறையில், கட்சிகள் தரவரிசைப்படுத்தப்பட்ட வேட்பாளர் பட்டியலைச் சமர்ப்பிக்கும்.
மேலும் வாக்கு விகிதத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். இது பாலின சமநிலையை உறுதி செய்கிறது. கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களில் கட்டாயமாக 1/3 பங்கு பெண்கள் இருக்க வேண்டும். இந்த பிஆர் முறையில் வேட்பாளர்களில் 33% பெண்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.
பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட டாப்-அப் பிஆர் இடங்களை பரிந்துரைக்கிறோம். அதாவது தற்போதைய 543 தொகுதிகள் மகளிர் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படாமல் அப்படியே இருக்கும். பெண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் கிடைக்காத பட்சத்தில், அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட பிஆர் இடங்கள் சேர்க்கப்படும். இது ஜெர்மனி, நியூசிலாந்தில் உள்ள கலப்பு முறைகளைப் போன்றது (அங்கு பிரதிநிதித்துவத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது).
எப்பிடிபி முறையை விட பிஆர் சிறந்தது
மக்களவையில் பயன்படுத்தப்படும் எப்பிடிபி முறையில், தொகுதிகளைப் பெண்களுக்காக ஒதுக்கலாம். ஆனால் அது வாக்காளர்களின் விருப்பத்தைத் தடுக்கிறது; சுழற்சி முறை தேவைப்படுகிறது. மேலும் வேட்பாளர் ஒதுக்கீடு மூலம் மட்டும் முடிவுகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. இதற்கு நேர்மாறாக, பிஆர் முறையில் இட ஒதுக்கீடு என்பது கட்சிப் பட்டியலின் அளவில் கட்டுப்படுத்தப்படுவதால், பாலின ஒதுக்கீட்டை கணித ரீதியாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்த முடியும்.
பெரிய கட்சிகள் வரலாற்று ரீதியாக பிஆர் முறையை எதிர்த்து வந்துள்ளன. ஆனால், உலக நாடுகளின் எண்ணிக்கையில் கால் பங்குக்கும் குறைவான நாடுகளே எப்பிடிபி முறையை மட்டும் பின்பற்றுகின்றன. காலனித்துவ ஆட்சியின் தாக்கத்தால் இந்தியா சுதந்திரத்தின் போது எப்பிடிபி முறையை ஏற்றுக் கொண்டாலும், இது உலகளவில் ஒரு சிறுபான்மை முறை (25%). உண்மையில், பிஆர் முறையே உலகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது (40%+), மேலும் கலப்பு முறைகள் பெருகி வருகின்றன (20%).
2014 மக்களவை பொதுத் தேர்தல்
2014 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவின் வாக்கு விகிதம் 31% ஆக இருந்தது, ஆனால் அதன் இடங்கள் 282/543 (52%) ஆக இருந்தது. வெறும் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளுடன் பாஜக பெரும்பான்மை பெற்றது. அதேசமயம், இந்திய தேசிய காங்கிரஸ் 19% வாக்கு விகிதத்தைப் பெற்றிருந்தும், வெறும் 44 இடங்களை (8%) மட்டுமே பெற்றது. எனவே, எப்பிடிபி முறையை பிஆர் முறையுடன் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கலாம்.
எவ்வாறு செயல்படும்?
மொத்தமுள்ள 216 பெண் உறுப்பினர்களில் 108 இடங்களை தற்போதுள்ள 543 தொகுதிகளில் இருந்து எப்பிடிபி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கூடுதலாகச் சேர்க்கப்படும் 108 இடங்களுக்கு (651 - 543 = 108)பிஆர் பட்டியல் முறைப்படி பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், சரிபாதி பெண்கள் தொகுதிகளில் இருந்தும் (எப்பிடிபி), மீதமுள்ள பாதிப் பேர் கட்சிப் பட்டியல்கள் (பிஆர்) மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஒரு கூட்டாட்சி நாட்டில், பிஆர் முறையின் கீழ் பெண்களுக்கான கட்சிப் பட்டியல்கள் தேசிய அளவிலா அல்லது மாநில அளவிலா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். மாநில அளவில் பெண் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதே கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஏற்றது.
கலப்புத் தேர்தல் முறை
இதைச் செயல்படுத்த, நாம் ஒரு கலப்பு முறையை வடிவமைக்க வேண்டும். முதலாவதாக அரசியலமைப்புச் சட்டம் 81-வது பிரிவை திருத்தி, இடங்களின் உச்ச வரம்பை 543-லிருந்து 651-ஆக உயர்த்த வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை திருத்தி, எப்பிடிபி + பிஆர் ஆகிய இரண்டும் இணைந்த தேர்தல் முறைக்கு வழிவகை செய்ய வேண்டும்.
இரட்டை வாக்கு முறை: ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு வாக்குகள் இருக்கும். ஒன்று தனது தொகுதி வேட்பாளருக்கு (எப்பிடிபி), மற்றொன்று கட்சிக்கு (பிஆர் இடங்களுக்காக). ஒவ்வொரு கட்சியும் மாநில வாரியாக பெண் வேட்பாளர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்கும்.
எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு மற்றும் மகளிர் இடஒதுக்கீடு
தற்போதைய 543 இடங்களில் எஸ்சி பிரிவினருக்கு 84 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 47 இடங்களும் (மொத்தம் 131) ஒதுக்கப்பட்டுள்ளன. மகளிர் இடஒதுக்கீடு வரும்போது, இதிலும் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
கட்சிகள் பிஆர் இடங்களுக்கு பொதுப் பிரிவு, எஸ்சி பிரிவு, எஸ்டி பிரிவு என மூன்று பட்டியல்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்: இந்தச் சட்டக் கட்டமைப்பு இந்திய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிகளுடன் ஒத்துப்போக வேண்டும். அரசியல் கட்சிகள் தேச நலன் கருதி இந்த முன்மொழிவுகளைப் பரிசீலிக்கும் என்று நம்புகிறோம்.
கட்டுரையாளர்: சந்தோஷ் மெஹ்ரோத்ரா, ஜேஎன்யு முன்னாள் பேராசிரியர் (பொருளாதாரம்)