“உ.பி. தேர்தலில் 80% சதவீத தொகுதிகளை கைப்பற்றுவோம்” - முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

“உ.பி. தேர்தலில் 80% சதவீத தொகுதிகளை கைப்பற்றுவோம்” - முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
Updated on: 
1 min read

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 80 சதவீத தொகுதிகளை கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடக பேட்டி ஒன்றில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜ கூட்டணி 80 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், மீதமுள்ள 20 சதவீத வாக்குகள் மட்டுமே எதிர்கட்சிகளுக்குச் செல்லும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக 2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக யோகி ஆதித்யநாத் இந்த 80-20 சூத்திரத்தை முதன்முதலில் முன்வைத்தார். தேசியவாதம், நல்லாட்சி மற்றும் வளர்ச்சியை விரும்பும் 80 சதவீத வாக்காளர்கள் பாஜவுக்கு வாக்களிப்பார்கள் என்றும், மீதமுள்ள 20 சதவீதத்தினர் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

தேர்தலில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "நாங்கள் 80-20 என்ற அடிப்படையில் களமிறங்குகிறோம். பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 80 சதவீத வாக்குகளைப் பெறும். இந்தச் சமன்பாடே சட்டப்பேரவைத் தொகுதி எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கும். நாங்கள் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. யோகி ஆதித்யநாத்தின் கணிப்பின்படி 80 சதவீதத் தொகுதிகளைக் கைப்பற்றினால், பாஜ கூட்டணி சுமார் 322 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மீதமுள்ள 81 தொகுதிகள் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்கும்.

2017 தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால், 2022 தேர்தலில் இக்கூட்டணி 273 தொகுதிகளை மட்டுமே பெற்றது. இந்நிலையில், 2022-இல் இழந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றி, மாநிலத்தில் பாதுகாப்பான ஆட்சியை பாஜக மீண்டும் அமைக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

“உ.பி. தேர்தலில் 80% சதவீத தொகுதிகளை கைப்பற்றுவோம்” - முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
“அமெரிக்க இடைத்தேர்தல் தோல்வி வரலாற்றுப் பின்னடைவு” - ட்ரம்ப் வேதனை

X