“எவ்வளவு காலத்துக்கு இந்த நாடகம் தொடரும்?” - ராகுல் காந்தி மீது கிரண் ரிஜிஜு சாடல்

“எவ்வளவு காலத்துக்கு இந்த நாடகம் தொடரும்?” - ராகுல் காந்தி மீது கிரண் ரிஜிஜு சாடல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ராகுல் காந்தி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் சென்ற நிலையில், இத்தகைய நாடகம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தொடரும் என்று கிரண் ரிஜிஜு கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு, “தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்ற அமைப்புகளை காங்கிரஸ் கட்சி குறிப்பாக ராகுல் காந்தியும், அவரது சகாக்களும் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அவர்கள் அரங்கேற்றும் இத்தகைய தினசரி நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

2014-ல் இருந்து இந்த நாடகம் நடந்து வருகிறது. இது இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும்?

ஜனநாயகத்தில் மக்களுக்குச் சேவை செய்வதன் மூலமே அரசியல் அங்கீகாரம் கிடைக்கிறது. அத்தகைய அங்கீகாரத்தைப் பெற தவறும் எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தைத் தாக்குகின்றன. நீதிமன்றம் கண்டித்தால், நீதிமன்றத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தையே தாக்குகின்றன. தேர்தல் ஆணையத்தையும் அரசாங்கத்தையும் காங்கிரஸ் "திருடர்கள்" என்று முத்திரை குத்துகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்தாது; காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்காது. சமூகத்துக்கும் நாட்டுக்கும் சுயநலமின்றி தொடர்ந்து சேவை செய்யும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தொண்டர்களிடம் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் சேவையில் ஈடுபட்டால் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். வெறும் நாடகங்கள் மட்டும் போதாது” என தெரிவித்தார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி இந்த பேரணி புறப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியை முன்னிட்டு, தேர்தல் ஆணைய அலுவலகப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டதோடு, ஏராளமான தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்துக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தடுக்கப்பட்டனர்.

“எவ்வளவு காலத்துக்கு இந்த நாடகம் தொடரும்?” - ராகுல் காந்தி மீது கிரண் ரிஜிஜு சாடல்
விமானி ஸ்மித் மச்சாருக்கு அவசர அறுவை சிகிச்சை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in