ம.பி.யில் அமைச்சர் வராத அரசு விழாவில் மகன் முதன்மை விருந்தினரானது எப்படி? - காங்கிரஸ் கேள்வி

பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கும் அமைச்சர் ராகேஷ் சுக்லாவின் மகன் அலோக் சுக்லா

பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கும் அமைச்சர் ராகேஷ் சுக்லாவின் மகன் அலோக் சுக்லா

Updated on
1 min read

புதுடெல்லி: மத்தியப்பிரதேச அரசு விழாவில் அமைச்சர் வராததால் அவரது மகன் முதன்மை விருந்தினராகி உள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இங்குள்ள மேஹ்கான் சட்டப்பேரவைத் தொகுதியில் 'சங்கல்ப் சே சமாதான்' எனும் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அமைச்சர் ராகேஷ் சுக்லா இந்த நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக வருகை தருவதாக இருந்தது.

ஆனால், அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போயுள்ளது. தனக்குப் பதிலாக தனது மகன் அலோக் சுக்லாவை விழாவில் கலந்து கொள்ள வைத்துள்ளார். வியப்பூட்டும் வகையில், அரசு அதிகாரிகள் அமைச்சரின் மகனை மேடையில் முதன்மை விருந்தினராக அமரவைத்துள்ளனர். மேலும், விழாவில் பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கச் செய்துள்ளனர்.

அலோக் சுக்லா சட்டரீதியாக எந்தவொரு அரசுப் பதவியிலும் இல்லை. இருப்பினும், அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள மத்தியப் பிரதேச காங்கிரஸார், பாஜக அமைச்சரின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குறித்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறைத் தலைவர் முகேஷ் நாயக், ‘‘பாஜக தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே அதிகாரிகள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறியுள்ளனர்.

ஒரு அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாவிட்டால், அவருக்குப் பதிலாக அவரது மகனை முதன்மை விருந்தினராக ஆக்குவது எத்தகைய விதிமுறை? இதேநிலை தொடர்ந்தால், நாளை அமைச்சர்கள் தங்கள் அமைச்சரவைக் கூட்டங்களுக்குக்கூடத் தங்களுக்குப் பதிலாகத் தங்கள் மகன்களை அனுப்பிவைக்கத் தொடங்கிவிடுவார்களா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் விளக்கம் அளித்த மாவட்டப் பஞ்சாயத்து முதன்மை நிர்வாக அதிகாரி வீர் சிங் சவுகான், ‘‘இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், அவரால் வர இயலவில்லை. அவரது பிரதிநிதியாக அவரது மகன் வருகை தந்தார். அதன் காரணமாகவே பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கும் அமைச்சர் ராகேஷ் சுக்லாவின் மகன் அலோக் சுக்லா</p></div>
பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்: ஏப்.1-ல் தேரோட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in