

புதுடெல்லி: முஸ்லிமாக மாறிய இந்துக்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ சாதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த பரமசிவம், கடந்த 2015-ம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறி, தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். இதையடுத்து, தனக்கு முஸ்லிம் லெப்பை என் சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை்யடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “இந்து மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறிய ஒருவர், தனது முந்தைய சமூக அடையாளத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் கோர முடியாது.
குறிப்பிட்ட சில சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்துக்கு மாறினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது” என கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து தமிழகஅரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு நீதிபதிகள் பிரசாந்த்குமார் மிஸ்ரா, ஸ்ரீசந்திரசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பட்டியல் சாதியினர் இஸ்லாத்துக்கு மாறும்போது, அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
மதம் மாறிய காரணத்தால் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் இடஒதுக்கீட்டுப் பலன்களை இழந்துவிடக் கூடாது என்பதே அரசாணையின் நோக்கம். இது மத அடிப்படையிலான சலுகை அல்ல” எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “இந்து மதத்திலிருந்து இஸ்லாம் உள்ளிட்ட இந்து அல்லாத மதங்களுக்கு மாறியவர்கள், தங்களது முந்தைய சமூக அடையாளத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு பிரிவு 16(4)ன் கீழ் பிற்படுத்தப்பட்ட சமூக நிலைக்கான இடஒதுக்கீட்டை கோர முடியாது.
மேலும், இஸ்லாத்துக்கு மாறிய பின்னர் ஏற்கெனவே வகைப்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற அவரது முந்தைய சமூக நிலையை மீண்டும் வழங்க முடியாது.
மேலும், அரசியலமைப்பின் பட்டியல் சாதி சமூக வகைப்படுத்தலின்படி, இந்து மதம், சீக்கிய மதம், பவுத்த மதம் ஆகியவற்றைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட மாட்டார். அதன் விளைவாக, அரசியலமைப்பின் பட்டியல் சாதி வகைப்பாட்டில் குறிப்பிடப்படாத ஒரு மதத்துக்கு மாறும்போது, அத்தகைய நபர் பட்டியல் சாதி அந்தஸ்தை இழக்கிறார், அதற்கான பலனையும் இழந்துவிடுகிறார்.
அதுபோல, ஒரு நபர் இஸ்லாம், கிறிஸ்தவம் அல்லது வேறு ஏதேனும் இந்து அல்லாத சமூக அமைப்புக்கு மாறிய பிறகு, முந்தைய மதத்தின் உறுப்பினர் தகுதியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான பலனை கோர முடியாது. அதன்படி, இந்துவிலிருந்து இஸ்லாத்துக்கு மாறும் ஒருவர், முந்தைய சாதி அந்தஸ்தை பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் (பி.சி. முஸ்லிம்) என்ற வகுப்புப் பிரிவுக்கு மாற்ற முடியாது.
எனவே, மதம் மாறிய நபருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மற்றும் அரசாணையை ரத்து செய்த உத்தரவையும் உறுதி செய்கிறோம்” என தீர்ப்பளித்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.