புதுடெல்லி: வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, இந்துக்களை துன்புறுத்துபவர்களை வங்கதேச இடைக்கால அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.
வங்கதேசத்தின் ஃபெனி மாவட்டத்தின் தகன்புயான் பகுதியைச் சேர்ந்த ஷோமிர் குமார் தாஸ் என்ற இளைஞர், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு வீட்டில் இருந்து தனது ஆட்டோவில் வெளியே சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாத நிலையில், திங்கள் கிழமை அதிகாலை 2 மணிக்கு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஃபெனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷபிகுல் இஸ்லாம், ‘‘ஷோமிர் குமார் தாஸ் அன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு மேல் தனது ஆட்டோவில் வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அதிகாலை 2 மணிக்குப் பின்னரே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு தேவையான சட்ட நடைமுறைகளை மேற்கொண்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை குறித்த எந்த துப்பும் இதுவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், யாரையும் கைது செய்யவும் முடியவில்லை. அதேநேரத்தில், நாங்கள் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொல்லப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பத் துறை பொறுப்பாளர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘வங்கதேசத்தில் இந்து சமூகத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு குறிவைக்கப்பட்ட தாக்குதலில் 28 வயதான ஷோமீர் குமார் தாஸ், ஜன11 அன்று ஃபெனி மாவட்டத்தின் தாகன்புயானில் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள், அவரது வாழ்வாதாரத்தின் ஒரே ஆதாரமாக இருந்த ஆட்டோவையும் கொள்ளையடித்துள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முகம்மது யூனுஸ் ஆட்சி வந்ததில் இருந்து விரக்தியின் விளம்புக்குத் தள்ளப்பட்டுள்ள வங்கதேச இந்துக்கள் மீதான இடைவிடாத துன்புறுத்தலை இந்த கொலை உணர்த்துகிறது. இடைக்கால அரசாங்கம், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினரைத் துன்புறுத்துபவர்களைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆறுதல் வார்த்தைகூட கூறுவதில்லை. மாறாக, தலைமைப் பொறுப்பில் இருப்பவர், இந்த குறிவைத்து நடக்கும் தாக்குதல்களை கற்பனை என்று நிராகரிக்கிறார்.
இந்த செய்தி அச்சமூட்டுவதாக உள்ளது. சிறுபான்மையினரின் உயிர்களுக்கு மதிப்பு இல்லை. 2026ல் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கத்திலும் இந்துக்களின் நிலைமை மோசமடையும். எனவே, மேற்கு வங்கத்தில் உள்ள வங்க மக்கள் எந்தவித மாயைகளுக்கும் ஆளாகக் கூடாது. ஹொர்கோபிந்தோ தாஸ் மற்றும் அவரது மகன் சந்தன் தாஸ் ஆகியோரின் ரத்தக் கறைகள் இன்னும் காயக்கூடவில்லை. ஒருபோதும் மறக்காதீர்கள், ஒருபோதும் மன்னிக்காதீர்கள்’’ என தெரிவித்துள்ளார்.