

நவி மும்பை: “இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பாலமாக இந்தி மொழி உள்ளது” என இந்தி மொழி தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
நவி மும்பையில் இன்று நடைபெற்ற ஆறாவது அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அலுவல் மொழியான இந்தி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மொழிகளுடனும் தொடர்புடையது. நான் குஜராத்தி பேசும் மாநிலமான குஜராத்தைச் சேர்ந்தவன். இருப்பினும், இந்தி மொழி காரணமாக, தேசிய அளவில் பணியாற்றுவதில் நான் ஒருபோதும் சிரமத்தை எதிர்கொண்டதில்லை.
நாடு முழுவதும் பணியாற்றுவதற்கான ஒரு மகத்தான வாய்ப்பை இந்த அலுவல் மொழி எனக்கு வழங்கியுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் கீழ், தொடக்க வகுப்புகளில் தாய்மொழியில் கல்வியை மோடி அரசு கட்டாயமாக்கியுள்ளது.
தாய்மொழி மூலமாகவே தவிர, ஒரு தாயின் பாசத்தையும் உடன்பிறந்தவர்களின் அன்பையும் வேறு எதன் மூலமும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஒருவரின் பூமி, மொழி, மதம், மரபுகள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த விழுமியங்களை தாய்மொழி வாயிலாகவே உள்வாங்கிக்கொள்ள முடியும்.
ஒரு நபர் தனது தாய்மொழியில் சிந்திக்கும்போதும், பகுப்பாய்வு செய்யும்போதும், படைப்புகளை உருவாக்கும்போதும், அதன் விளைவு எப்போதும் சிறப்பாக அமைகிறது.
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி நிச்சயமாக மதிக்கப்படுகிறது; அது அவ்வாறே மதிக்கப்படவும் வேண்டும். மராத்திக்குச் செம்மொழி அந்தஸ்தை வழங்கியது நமது பிரதமர் மோடிதான்.
இருப்பினும், சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் இந்த மண்ணில், கொங்கணி, குஜராத்தி, சிந்தி, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளுடன் மராத்தியும் செழித்து வளர்ந்து, மதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மிகப்பெரிய பன்மொழி மாநிலமாகத் திகழ்கிறது.
இந்த அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டை டெல்லியுடன் மட்டும் மட்டுப்படுத்தாமல், ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று 2019-ல் நாங்கள் முடிவு செய்தோம்; இன்று நடைபெறுவது அத்தகைய ஆறாவது மாநாடாகும்.
பிரதமர் மோடி உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அது முக்கிய உச்சிமாநாடாகவோ அல்லது எந்த நாடாகவோ இருந்தாலும், அவர் அங்கிருந்த மக்களிடம் அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியிலும், இந்திய மொழிகளிலும் உரையாற்றுகிறார்.
வெளிநாட்டு மொழிக்குப் பதிலாக, நமது நாட்டின் பிரதமர் உலகளாவிய மேடைகளில் தனது சொந்த மொழியில் பேசுவதைக் கேட்பது பெருமிதத்தையும் கவுரவத்தையும் அளிக்கிறது. நம் நாட்டின் மொழிகளுக்குப் பிரதமர் அளிக்கும் மரியாதை இதுவேயாகும்” என்று கூறினார்.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ம் தேதி 'இந்தி திவாஸ்' எனப்படும் இந்தி மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.