

கொல்கத்தா: போலி வாக்காளர்களை நீக்குவதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் முஸ்லிம்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதாக மேற்கு வங்கம், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில், சுமார் 91 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இவர்களில் சுமார் 63% பேர் இந்துக்கள் (சுமார் 57.47 லட்சம்), 34% பேர் முஸ்லிம்கள் (சுமார் 31.1 லட்சம்). இந்த நீக்கங்கள் வழக்கமான தூய்மைப்படுத்தும் பணியின் ஒரு பகுதி என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறினார்.
எஸ்ஐஆர் பணியின்போது முஸ்லிம்கள் அதிகம் நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை நிராகரித்த தேர்தல் ஆணையம் இறந்த அல்லது இரட்டைப் பதிவுகளை நீக்கி வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் அரசியலமைப்பு நடவடிக்கைதான் எஸ்ஐஆர் என்று கூறியது. ஊடுருவல்காரர்களை தடுப்பதற்கான வழிதான் எஸ்ஐஆர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய ஜனநாயகத் தேர்தல்களின் நேர்மையைக் குலைக்கும் நோக்கில் நடத்தப்படும் விரிவான வாக்குத் திருட்டு திட்டத்தின் ஒரு பகுதியே எஸ்ஐஆர் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த அமித் ஷா, ‘‘கண்டறிதல், நீக்குதல் மற்றும் நாடு கடத்துதல்’’ என்ற கொள்கையின் மூலம் பாஜக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறினார். இதில் நாடு கடத்துதல் என்ற அம்சம் முஸ்லிம்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 23-ம் தேதி 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 54 தொகுதிகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை கணிசமாக உள்ளது. இங்கு கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை விட பல தொகுதிகளில் வாக்குப்பதிவு கடுமையாக அதிகரித்துள்ளது. எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது அதிக நீக்கங்கள் செய்யப்பட்ட முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மாவட்டங்களில் வாக்குப்பதிவு 90 சதவீதத்தை தாண்டியது. வாக்காளர் பட்டியல் திருத்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மேற்குவங்கத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.