நெருங்கும் ‘அர்னாப்’ புயல் - ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் அதிகனமழை

நெருங்கும் ‘அர்னாப்’ புயல் - ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் அதிகனமழை
Updated on: 
2 min read

அமராவதி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘அர்னாப்’ புயல் அதிதீவிரப் புயலாக வலுவடைந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் ஆந்திரப் பிரதேசக் கடற்பகுதியில் கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தெற்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களில் 65 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட விமான நிலையங்களிலிருந்து இயக்கப்படவிருந்த 21 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விசாகப்பட்டினத்திற்குத் தெற்கு-தென்கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள இப்புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வேளையில் மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்திலும், இடையிடையே 150 கி.மீ வேகம் வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும். மேலும் இப்பகுதிகளில் அதிகனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் முன்னெச்சரிக்கையாகப் தாழ்வான பகுதிகளில் வசித்த 84,396 பேர் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 20 மாவட்டங்களில் உள்ள 2,131 இடங்களில் தற்காலிகப் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 18 மாவட்டங்களில் வாழும் 2.70 கோடி மக்களுக்குப் புயல் எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் 1,087 மருத்துவக் குழுக்கள், 8,281 அவசர சிகிச்சைப் படுக்கைகள் மற்றும் 1,274 அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் தாழ்வான மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலிருந்து சுமார் 48,000 மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 மாவட்டங்களில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 294 மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டு, பாரதீப், தாம்ரா மற்றும் கோபால்பூர் துறைமுகங்களில் எச்சரிக்கைக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

புயலின் தாக்கத்தால் சென்னை எண்ணூர் பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரையில் திடீரென்று பொங்கி எழுந்த அலையின் சீற்றத்தால் தடுப்புகளை தாண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

 மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கடலோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நெருங்கும் ‘அர்னாப்’ புயல் - ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் அதிகனமழை
மிகத் தீவிர புயலாக நிலவும் ‘அர்னாப்’ தாக்கம் எப்படி இருக்கும்? - மீனவர்களுக்கு எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in