

படம்: சுதாகர் ஜெயின்
புதுடெல்லி: வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் முக்கிய பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் மற்றும் டெல்லியின் சில பகுதிகளில் ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வெப்ப அலை நிலவ வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஏப்ரல் 23 முதல் 25 வரையிலும், கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஏப்ரல் 22 முதல் 26 வரையிலும், ராஜஸ்தானில் ஏப்ரல் 24 முதல் 26 வரையிலும், மத்தியப் பிரதேசத்தில் ஏப்ரல் 23 முதல் 26 வரையிலும், விதர்பா மற்றும் சத்தீஸ்கரில் ஏப்ரல் 24 முதல் 27 வரையிலும், மேற்கு வங்கம், பிஹார் மற்றும் ஜார்க்கண்டில் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் வெப்ப அலை நிலவக் கூடும்.
ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, கடலோர கர்நாடகா மற்றும் குஜராத்தின் கடலோரப் பகுதிகளின் ஆங்காங்கே உள்ள சில இடங்களில் ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 25 வரையிலான காலகட்டத்தில் வெப்பமான வானிலை நிலவக்கூடும்.
இந்தக் காலகட்டத்தில், ஹரியாணா, சண்டிகர், டெல்லி, ஒடிசா, கொங்கண் மற்றும் கோவாவில் இரவுகளிலும் வெப்பமான வானிலை இருக்கக் கூடும்.
இதற்கிடையில், வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில், இந்த வாரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எப்படி?
‘தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை முதல் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக் கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கக்கூடும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.