“தீபாவளி நாளன்றும் கூட வசை சொற்களால் தாக்குகிறார்” - பிரதமரை சாடும் காங்கிரஸ்

ஜெய்ராம் ரமேஷ் | கோப்புப் படம்.
ஜெய்ராம் ரமேஷ் | கோப்புப் படம்.
Updated on: 
1 min read

புது டெல்லி: அறிவுசார் நக்சல்கள் என்று குறிப்பிட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். “தீபாவளி நாளன்றும் கூட பிரதமர் வசை சொற்களை பயன்படுத்துகிறார்” என்று அவர் சாடியுள்ளார்.

இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தீபாவளி நாளன்றும் கூட பிரதமர் தனது வழக்கமான வசை சொற்களை பயன்படுத்தத் தயங்கவில்லை. அவர் மீண்டும் ஒருமுறை, 'திமாஜி நக்சல்கள் (அறிவுசார் நக்சல்கள்)' என்று பேசியுள்ளார்.

மிகவும் புனிதமான, அரசியல் சாராத ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்புப் படையினரின் சீருடையை அணிந்துகொண்டு, தனது அரசியல் எதிரிகளை வசவு சொற்களால் தாக்கியுள்ளார். இது அனைத்து நிறுவன நெறிகள் மீதான அப்பட்டமான தாக்குதல்.

ஏப்ரல் 28, 2024 அன்று, சாதிவாரி கணக்கெடுப்பைக் கோருபவர்களை "நகர்ப்புற நக்சல்கள்" என்று பிரதமர் முத்திரை குத்தினார். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஏப்ரல் 30, 2025 அன்று அவரே அறிவித்தார். நவம்பர் 19, 2021 அன்று மத்திய அரசாங்கம் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு முன்பு, செப்டம்பர் 2020-ல் நடந்த விவசாயிகள் போராட்டங்களின் போது, போராட்டக்காரர்களை நக்சல் சித்தாந்த ஆதரவாளர்கள் என்று பிரதமர் அழைத்தார்.

பிரதமர் மன உளைச்சலுடனும், கலக்கத்துடனும், விரக்தியுடனும் இருக்கிறார். அவர் தனது மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

தீபாவளி கொண்டாட்டங்களின் போது பஸ்தாரில் பாதுகாப்புப் படையினரிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்ட போதிலும், "திமாஜி நக்சல்கள்" பல்வேறு அமைப்புகளிலும் அரசியல் கட்சிகளிலும் தொடர்ந்து ஊடுருவி, அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக மக்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டினார்.

ஜெய்ராம் ரமேஷ் | கோப்புப் படம்.
“நக்சல் அச்சத்தில் இருந்து மக்கள் முழுமையாக விடுபட்டுள்ள முதல் தீபாவளி இது” - பிரதமர் மோடி

X