‘‘சூப்பர் மேனைவிட ஹனுமன் வலிமையானவர்’’ - அறிவியல் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேச்சு

‘‘சூப்பர் மேனைவிட ஹனுமன் வலிமையானவர்’’ - அறிவியல் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேச்சு
Updated on
1 min read

திருப்பதி: “சூப்பர் மேனைவிட ஹனுமன் வலிமையானவர். அயர்ன் மேனைவிட அர்ஜுனன் சிறந்த வீரர்” என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில், பாரதிய விஞ்ஞான் சம்மேளனத்தின் 7-ம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘‘ஆஞ்சநேயரின் வலிமை சூப்பர் மேனின் வலிமையை விஞ்சக்கூடியது. அதேபோல், அர்ஜுனனின் வீரம், அயர்ன் மேனின் வீரத்தைவிட சிறந்தது.

நாம் நமது குழந்தைகளையும் இளைஞர்களையும் மேற்கத்திய சூப்பர் ஹீரோ கதைகளுக்குள் முடக்கிவிடாமல், அவர்களுக்கு இந்தியாவின் இதிகாசங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியம் குறித்த அறிவை புகட்ட வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் சமூகமும் இதற்கு முன்வர வேண்டும். ஸ்பைடர் மேன், பேட் மேன் அல்லது சூப்பர் மேன் கதாபாத்திரங்களைவிட இந்தியாவின் புராண நாயகர்கள் மிகச் சிறந்த விழுமியங்கள், வலிமை, லட்சியங்களைக் கொண்டுள்ளனர்.

ராமர் நீதியின் இறுதிச் சின்னமாகத் திகழ்கிறார். ராமராஜ்ஜியம் சிறந்த நல்லாட்சிக்கு உதாரணமாக விளங்குகிறது. ராமர், கிருஷ்ணர், சிவபெருமான் ஆகியோரின் பெருமைகள் குறித்தும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கிடைக்கும் பாடங்கள் குறித்தும் நாம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். இந்த இதிகாசங்கள், அவதார் போன்ற பிரபலமான திரைப்படங்களைவிடவும் ஆழமானவை. பகாசுரன், கம்சன் போன்ற கதாபாத்திரங்களின் கதைகள் மூலம் குழந்தைகளுக்கு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறபாட்டைக் கற்பிக்க வேண்டும்.

இந்தியாவைச் சேர்ந்த 4-5 கோடி மக்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ளனர். இன்று நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குள்ள இந்தியர்களிடையே தனிநபர் வருமானம் மிகவும் அதிகமாக உள்ளது. மோகன் பாகவத் எப்போதும் கூறுவதுபோல ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். நாம் மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால், 2047க்குப் பிறகும் இந்தியாதான் ஆதிக்கம் செலுத்தும்’’ என தெரிவித்தார்.

‘‘சூப்பர் மேனைவிட ஹனுமன் வலிமையானவர்’’ - அறிவியல் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேச்சு
வங்கதேசத்தில் இந்துக்கள் உள்பட சிறுபான்மையினருக்கு எதிராக 2,900+ வன்முறைச் சம்பவங்கள் பதிவு: இந்தியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in