புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உறுதியான மாதாந்திரத் தொகையை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் (யுபிஎஸ்) எந்த மாற்றத்தையும் செய்யும் திட்டமோ அல்லது திட்டத்தை மாற்றும் திட்டமோ அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், ‘தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உறுதியான மாதாந்திரத் தொகையை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் எந்த மாற்றங்களையும் செய்வது அல்லது திட்டத்தை மாற்றுவது என எந்த முன்மொழிவும் அரசின் பரிசீலனையில் இல்லை. என்பிஎஸ்-ன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு விருப்பத் தேர்வாக யுபிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிதாகச் சேர்ந்தவர்கள், தற்போது பணியில் உள்ளவர்கள், ஏற்கனவே ஓய்வு பெற்றவர்கள் உட்பட யுபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்த ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை ஜூலை 19, 2026ன்படி ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 195 ஆக உள்ளது.
நிதி ரீதியாகப் பொறுப்பான, நிதியுதவி மற்றும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை உறுதி செய்யும் அதே வேளையில், ஓய்வுக்குப் பிந்தைய உறுதியான ஓய்வூதியம் குறித்த என்பிஎஸ் ஊழியர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் வகையில் யுபிஎஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஊழியர்கள் மற்றும் சங்கங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், யுபிஎஸ்-ஐ தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு நவ. 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டது. மத்திய சிவில் பணி விதிகள் 2021ன் கீழ் உள்ள ஓய்வுக்கால பணிக்கொடை மற்றும் இறப்புக்கால பணிக்கொடை ஆகியவற்றின் பலன்களை யுபிஎஸ்-ன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அரசு நீட்டித்துள்ளது.
என்பிஎஸ்-க்கு வழங்கப்படுவது போல வரிச்சலுகைகளை யுபிஎஸ்-க்கும் அரசு நீட்டித்துள்ளது. கூடுதலாக யுபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்த மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் என்பிஎஸ்-க்கு மாறுவதற்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கும் வசதியை அரசு அனுமதித்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.