மசோதா மீது முடிவெடுக்க ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை அரசியலமைப்புக்கு எதிரானது என கூறி நிராகரித்துள்ளது.

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்பது குறித்து வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், “ ஆளுநருக்கும் மாநில சட்டமன்றத்திற்கும் இடையே உரையாடலைத் தொடங்குவதற்கான பிரிவு 200 இன் முதல் விதி அவசியம். இது நிர்வாகத்தின் கூட்டாட்சி தன்மையையும், சமநிலையின் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. அதன்படி ஆளுநர் காரணம் சொல்லாமல் மசோதாக்களை திருப்பி அனுப்ப முடியாது.

மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், எந்த பதிலும் அளிக்காமலும் ஆளுநர்கள் கிடப்பில் போட அதிகாரம் இல்லை. மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல், நிராகரித்தல் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஒன்றை மட்டுமே ஆளுநர் தேர்ந்தெடுக்க விருப்புரிமை உள்ளது. மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு அளிப்பதுபோல செயல்பட முடியாது.

அதேநேரத்தில், மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. அதேபோல, ஆளுநர்கள் உரிய காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க உத்தரவிட முடியாது.

ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல. ஆனால் ஆளுநர்கள் மசோதாக்களை முடிவில்லாமல் நிறுத்த முடியாது. ஆளுநர்கள் நியாயமான காலக்கெடுவிற்குள் செயல்பட வேண்டும். மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த 2 நீதிபதிகளின் தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி என்ன? - தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டதையடுத்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் மாதம், தமிழக ஆளுநரின் இந்த செயல் சட்டவிரோதம் என அறிவித்து அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக அமலுக்கு வந்துவி்ட்டதாக அறிவித்தனர். மேலும் சட்டப் பேரவையில் மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவுஎடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,கடந்த மே 13 அன்று அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அதிகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in