புதுடெல்லி: நாட்டின் புதிய ராணுவத் தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றார்.
ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி இன்று ஓய்வு பெற்றதை அடுத்து, நாட்டின் 31-வது ராணுவ தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் இன்று பொறுப்பேற்றார்.
ராணுவத்தில் சுமார் 40 ஆண்டு காலமாக பணியில் இருக்கும் தீரஜ் சேத், பல பிரிவுகளில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். இவர் கடந்த 1986-ம் ஆண்டு ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார். காஷ்மீரில் தீவிரவாத ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
லெப்டினன்ட் ஜெனராலாக பதவி உயர்வு பெற்ற பின் இவர், ராணுவத்தின் வான் பாதுகாப்பு பிரிவான சுதர்ஸன சக்கர படைப்பிரிவுக்கு தலைமை தாங்கினார். தென்மேற்கு மற்றும் தென் மண்டலங்களிலும் இவர் தலைமை அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
அங்கோலா நாட்டில் ஐ.நா படை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். பிரான்ஸின் பாரீஸில் இவர் ராணுவ உயர் அதிகாரி பயிற்சியில் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக, ஜெனரல் உபேந்திர திவிவேதி விடைபெறும் விழாவின் ஒரு பகுதியாக புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று நான் இந்த பொறுப்பை ஜெனரல் தீரஜ் சேத்திடம் ஒப்படைக்கிறேன். அவர் ஓர் அனுபவம் வாய்ந்த வீரர், திறமையான நிர்வாகி.
இந்த பொறுப்பை ஒப்படைக்கும் வேயைில், இந்திய ராணுவத்தின் எதிர்காலம் குறித்து நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். நமது ராணுவம் தனது மரபுகளில் உறுதியாக நிலைத்திருக்கும். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் விழிப்புடன் இருக்கும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலைக்கும் தொடர்ந்து தயாராக இருக்கும்” என தெரிவித்தார்.