

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த ஒரு கும்பல், அரசுப் பணி பெற்றுத் தருவதாகக் கூறி பல மாநிலங்களில் மோசடி செய்து வந்துள்ளது. அரசு அதிகாரி பணிக்காக போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களை இவர்கள் குறி வைத்துள்ளனர்.
இந்நிலையில் வருமான வரித் துறை மூத்த அதிகாரிகள் போல இளைஞர்களிடம் நடித்த இவர்கள் லஞ்சப் பணத்துக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதற்காக மத்திய வருமான வரித்துறை இணையதளம் போன்று போலி இணையதளம் உருவாக்கி உள்ளனர்.
அதன்மூலம் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பம் மற்றும் பிற செலவுகள் என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளனர். பின்னர் அவர்கள் வருமான வரித் துறை பெயரில் போலித் தேர்வுகளை டெல்லியில் தனியார் இடங்களில் நடத்தி உள்ளனர்.
இந்த கும்பலிடம் ரூ.30 லட்சம் ரொக்கமாக கொடுத்து உ.பி.யின் பிஜ்னோர் மாவட்டம் ஷேர்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரஜ்வீர் சிங் என்பவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவரது புகார் மீது பிஜ்னோர் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட தலைமை நீதிமன்றத்தை அணுகினார். இப்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் பிஜ்னோரின் நங்கல் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து மோசடிக் கும்பலைத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பிரஜ்வீர் சிங் கூறுகையில், ‘‘எங்களை நம்ப வைப்பதற்காக எங்கள் செல்போன்களுக்கு ஒடிபி.களும் அனுப்பினர். பணி நியமனத்தின் பேரில் எங்களுக்கு வருமான வரித்துறை போலி அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. பணிக்கான பாதுகாப்புத் தொகை எனும் பெயரில் ரொக்கமாக ரூ.10 லட்சமும் வசூலித்தனர். ஆனால், எந்த அலுவலகத்தில் பணி என்று குறிப்பிடவில்லை.
நான் டெல்லியில் மத்திய வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரித்தேன். அப்போதுதான் உண்மை தெரியவந்தது. எனது காவல்துறை புகாருக்கு பிறகு மோசடி கும்பலிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல்களும் வந்தன’’ என்று தெரிவித்தார்.
வருமான வரித்துறை மட்டுமின்றி வேறு சில அரசுத் துறைகளிலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு மாநிலங்களில் இக்கும்பல் பலரை ஏமாற்றியுள்ளது. பொய் வழக்கு போடுவோம் என பாதிக்கப்பட்டவர்களை மோசடிக் கும்பல் மிரட்டியதால் புகார் அளிக்க பலரும் அஞ்சியுள்ளனர்.