ககோரி வழக்கில் தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் அஷ்பாக்குல்லா கான் வரலாறு

பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
ககோரி வழக்கில் தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் அஷ்பாக்குல்லா கான் வரலாறு
Updated on: 
2 min read

புதுடெல்லி:  இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ‘ககோரி வழக்கு’ எனக் குறிப்பிடப்படும் சம்பவத்தில் ஈடுபட்ட உருது கவிஞரான அஷ்பாக்குல்லா கானின் பிறந்தநாள் இன்று (அக்.22).

சுதந்திரப் போராட்ட காலம் அது. 1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி, உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரிலிருந்து லக்னோவை நோக்கி 'நம்பர் 8 டவுன்' ரயில் புறப்பட்டது. ஆங்கிலேயருக்கு சொந்தமான, அவர்களின் கருவூலத்திற்குச் செல்ல வேண்டிய தொகையுடன் ஒரு பெட்டி அதில் பயணித்தது. அதே ரயிலில் 10 இளம் புரட்சியாளர்களும் பயணித்தனர்.

அந்த ரயில், கான்பூரின் அருகே ககோரி என்ற கிராமத்தினைக் கடக்கும்போது சங்கிலியை பிடித்து இழுத்து அந்த இளைஞர்கள் ரயிலை நிறுத்தினர். ஆங்கிலேயரின் கருவூலப் பெட்டிக்கு செல்ல வேண்டிய சுமார் ரூ.8,000-ஐ அவர்கள் கைப்பற்றினர். இந்த தொகையை தங்களின் திட்டப்படி ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்திற்குப் பயன்படுத்தினர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இந்த சம்பவம், ‘ககோரி வழக்கு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த 10 பேரில் ஒருவர் அஷ்பாகுல்லா கான். 24 வயதான அவர், 'ஹஸ்ரத்' என்ற புனைபெயரில் உருதுக் கவிதைகளை எழுதி வந்த ஒரு பட்டான் சமூகத்தைச் சேர்ந்த கவிஞர். தொடக்கத்தில் அஷ்பாகுல்லா கான் இந்த ரயில் கொள்ளைத் திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்தார்.

ஆனால், அவரது தோழர்கள் முடிவெடுத்தபோது, அவர் அவர்களுடன் உறுதியாக நின்றார்; குறிப்பாக, தனது நெருங்கிய நண்பரான ராம் பிரசாத் பிஸ்மிலுக்குத் துணையாக இருந்தார். பிஸ்மில் ஒரு ஆர்ய சமாக் சமூகத்தைச் சேர்ந்தவர். அஷ்பாக் ஒரு தீவிரமான முஸ்லிம். தொடக்கத்தில் பிஸ்மிலுக்கு அஷ்பாக் மீது நம்பிக்கை இருக்கவில்லை.

எனினும், அஷ்பாக் தொடர்ந்து பிஸ்மிலை அணுகியதால், அந்தச் சந்தேகம் மறைந்து, இருவருக்கும் இடையே சகோதரத்துவம் மலர்ந்தது. அவர் பிஸ்மலை, ‘ராம்’ என்றுதான் அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ரயில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என ஆங்கிலேய அரசு 40 பேரைக் கைது செய்தது.

ஆயினும் அஷ்பாக் தலைமறைவாகி, 16 மாதங்கள் மறைந்து வாழ்ந்தார். இறுதியில், டெல்லியில் அவரது சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு பட்டான் சமூகத்து நண்பர், பரிசுத் தொகைக்காக அவரைக் காட்டிக்கொடுத்தார். 1926- ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி அன்று அஷ்பாக்  கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்தபோது, தஸத்துக் ஹுசைன் என்ற முஸ்லிம் காவல் அதிகாரி அஷ்பாக் விடுதலைக்காக ஒரு யோசனை கூறினார் ’பிஸ்மில் ஒரு இந்து, அவர் இந்து ஆட்சியை நிறுவ போராடுகிறார். எனவே, அவருக்கு எதிராகச் சாட்சியம் கூறுங்கள்’ என்றார்.

அஷ்பாக் அதனைத் தீவிரமாக மறுத்துவிட்டார். பிஸ்மில் தனது சகோதரர் என்று கூறிய அவர், ‘பிரிட்டிஷ் ஆட்சியை விட இந்து ஆட்சி கூட மேலானதுதான்’ என்று தெரிவித்தார். ககோரி வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1927 டிசம்பர் 19-இல், ஃபைசாபாத் சிறையில், கையில் குர்ஆனுடன் தூக்கு மேடையை நோக்கி அஷ்பாக் நடந்து சென்றார்.

தூக்குக் கயிற்றை முத்தமிட்ட அஷ்பாக்குல்லா கான் கூறியது, ‘என் கைகள் எந்த மனிதனின் கொலையிலும் கறைபடவில்லை. என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. இறைவன் எனக்கு நீதி வழங்குவான்’ என்றார்.

அவரது கடைசி விருப்பம் என்னவென்று கேட்டபோது, ’வேறு எந்த விருப்பமும் எனக்கில்லை, ஒரே ஒரு விருப்பம் மட்டும்தான் உண்டு. என் கபன் துணியில் (பிணத்திற்கானத் துணி) என் தாய்நாட்டின் மண்ணைச் சிறிது தூவி விடுங்கள். இது மட்டுமே எனது விருப்பம்’ எனக் கூறினார்.

அதே நாளில், கோரக்பூர் சிறையில் அஷ்பாக்கின் நண்பர் பிஸ்மிலும் தூக்கிலிடப்பட்டார். இருவேறு மத நம்பிக்கைகள் கொண்டவர்களாகினும் நண்பர்களாக வாழ்ந்தவர்கள் ஒரே நாளில் பலியாக்கப்பட்டனர். அஷ்பாக் அப்போது வெறும் 27 வயதேயான இளைஞர்.

இந்திய சுதந்திரப்போராட்ட வீரரான அஷ்பாக், ‘இந்துஸ்தான் ரிபப்ளிக் அசோஷியசன்ஸ்’ எனும் அமைப்பின் இணை நிறுவனர். இதன் சார்பில் ஆயுதங்கள் வாங்கி ஆங்கிலேயர்களை வெளியேற்றுவது அவர்களது நோக்கம். கடந்த 1900-இல் உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் பிறந்த அஷ்பாக்கிற்கு அக்டோபர் 22 இன்று பிறந்த நாள்.

ககோரி வழக்கில் தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் அஷ்பாக்குல்லா கான் வரலாறு
“உக்ரைன், மேற்கு ஆசிய அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு” - பிரதமர் மோடி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in