

லக்னோ: “ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டி திட்டத்தின் கீழ், 2025-26 கல்வியாண்டில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த 50,000 பெண் பட்டதாரிகளுக்கு, அடுத்த மாதம் இலவச ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், இதுகுறித்து கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் 9, 10-ம் வகுப்பை சேர்ந்த 4.6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.148 கோடிக்கும் அதிகமான கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கட்டணத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
முன்பு 100 மாணவர்களில் 60 முதல் 70 பேர் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற்றனர். எழுத்தர்கள் உள்ளிட்ட சிலர் அந்தப் பணத்தை முறைகேடாகப் பெற்றதால் மாணவர்கள் ஏமாற்றப்பட்டனர். முன்பு மாணவர்கள் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்காக செய்த பயணச் செலவு, அவர்கள் இறுதியில் பெற்ற தொகையைவிட அதிகமாக இருந்தது.
தற்போது, ஒவ்வொரு மாணவரின் கல்வி உதவித் தொகையும் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் சேரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜேஇஇ, நீட் போன்ற தேர்வுகளுக்குத் தயாராவதற்காக உத்தர பிரதேச மாணவர்கள் இனி பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது முதல்வர் அப்யுதயா கோச்சிங் திட்டத்தின் மூலம் இளைஞர்கள் இதன் பயனைப் பெற்று வருகின்றனர். ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டி திட்டத்தின் கீழ், 2025-26 கல்வியாண்டில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த 50,000 பெண் பட்டதாரிகளுக்கு, அடுத்த மாதம் இலவச ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.