

இந்தியா - சிங்கப்பூர் இடையே அமைச்சர்கள் நிலையிலான 4-வது வட்டமேசை சந்திப்பு சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் ஜித்தின் பிரசாதா ஆகியோர், சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். படம்: பிடிஐ
சிங்கப்பூர்: இந்தியா-சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இருநாடுகளில் அமைச்சர்கள் நிலையிலான வட்டமேசை சந்திப்பு (ஐஎஸ்எம்ஆர்) கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் 4-வது ஐஎஸ்எம்ஆர் சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜித்தின் பிரசாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில், வேளாண் உணவு வர்த்தகம் மற்றும் கடல்சார் பாரம்பரியம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளும் ஒப்பந்தங்களை மேற்கொண்டன. மேலும், டிஜிட்டல்மயமாக்கல், திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மருத்துவம், மேம்பட்ட உற்பத்தி மற்றும் இணைப்புத்திறன் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பும் முக்கிய முடிவுகளை எடுத்தன.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடும் வர்த்தகமும் அதிகரித்துள்ள நிலையில், விமானப் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சர்கள் விவாதித்ததாக சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வட்டமேசை சந்திப்புக்கு முன்பாக இந்திய அமைச்சர்கள் 4 பேரும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரூ.18.64 லட்சம் கோடி முதலீடு: இதனிடையே, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும், இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டு ஆதாரமாக சிங்கப்பூர் விளங்கி வருவதாகவும் மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025-26 நிதியாண்டில் ரூ.1.89 லட்சம் கோடி முதலீட்டு வரவுடன், சிங்கப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டு ஆதாரமாக விளங்கியது.
ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு ரூ.18.64 லட்சம் கோடியாக இருந்தது. அதே வேளையில் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வர்த்தகம், 2004-05 நிதியாண்டில் ரூ.64.15 ஆயிரம் கோடியிலிருந்து 2025-26 நிதியாண்டில் ரூ.3.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.