இந்தியாவுக்குள் 4 சீன டாங்கிகள் நுழைந்ததாக ராகுல் குற்றச்சாட்டு - மக்களவையில் கடும் அமளி

முன்னாள் ராணுவத் தளபதியின் சுயசரிதையை சுட்டிக்காட்டி பேச்சு
இந்தியாவுக்குள் 4 சீன டாங்கிகள் நுழைந்ததாக ராகுல் குற்றச்சாட்டு - மக்களவையில் கடும் அமளி
Updated on
2 min read

புதுடெல்லி: இந்திய - சீன மோதலின்போது, சீனாவைச் சேர்ந்த நான்கு டாங்கிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக முன்னாள் ராணுவத் தளபதி நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதையில் எழுதப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி கூறியதை அடுத்து, மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பாஜகவைச் சேர்ந்த ஓர் இளம் எம்.பி. (தேஜஸ்வி சூர்யா) காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். எங்கள் தேசபக்தி குறித்தும் கலாச்சாரம் குறித்த எங்கள் புரிதல் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். எங்களைப் பற்றி அவர் கேள்வி எழுப்பியதால் நான் அது தொடர்பான ஒரு விஷயத்தில் இருந்து எனது உரையை தொடங்க விரும்புகிறேன்.

இது முன்னாள் ராணுவத் தளபதி நரவனேவின் நினைவுக் குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. இதை நீங்கள் நன்றாக கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான், யார் தேச பக்தி உள்ளவர், யார் இல்லாதவர் என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள். இது, நான்கு சீன டாங்கிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது நடந்த சம்பவம் பற்றியது. அவை டோக்லாமில் உள்ள ஒரு முகட்டைக் கைப்பற்றிக் கொண்டிருந்தன” என தெரிவித்தார்.

அப்போது ஆளும் கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து, “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மேற்கோள் காட்டும் புத்தகத்தை அவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில், அவர் குறிப்பிடும் புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லை” என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “எனது ஆதாரம் நம்பகமானது. டிசம்பர் 2019 முதல் ஏப்ரல் 2022 வரை ராணுவத் தளபதியாக இருந்த முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவணேவின் வெளியிடப்படாத நினைவுக் குறிப்புகளை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட ஒரு பத்திரிகை கட்டுரையில் இடம்பெற்றுள்ளன” என தெரிவித்தார்.

‘வெளியிடப்படாத விஷயங்களை அவையில் வாசிக்கக் கூடாது’ என்று ஆளும் தரப்பு எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, ‘வெளியிடப்படாத விஷயங்களை அவையில் வாசிக்க முடியாது’ என தெரிவித்து, அதை வாசிக்கக் கூடாது என உத்தரவிட்டார். சட்டம் மற்றும் விதிகளின்படி அவை நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கருத்தை முழுமையாக தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பத்திரிகைகள் அல்லது செய்தித்தாள்களில் இருந்து வரும் கட்டுரைகளை அவையில் மேற்கோள் காட்ட முடியாது என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அவையில் விவாதம் என்பது சட்டங்களின்படி நடத்தப்பட வேண்டும். சபாநாயகரின் தீர்ப்பை மதிக்காத ஒரு உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் நாம் விவாதிக்க வேண்டும்” என கூறினார்.

இரு தரப்பு எம்பிக்களும் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவையை மாலை 4 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இந்தியாவுக்குள் 4 சீன டாங்கிகள் நுழைந்ததாக ராகுல் குற்றச்சாட்டு - மக்களவையில் கடும் அமளி
பலுசிஸ்தானில் 200க்கும் மேற்பட்டோர் படுகொலை | பாக். ராணுவம் - தீவிரவாதிகள் இடையே தொடரும் மோதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in