

ஜான்சி: உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரின் முதல் பெண் ஆட்டோ டிரைவரை அவரது முன்னாள் கணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அவரை போலீஸார் சுட்டு பிடித்தனர்.
உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரைச் சேர்ந்தவர் அனிதா சவுத்திரி(40). இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆட்டோ ரிக் ஷா ஓட்டி வந்தார். இவர் முகேஷ் ஜா என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.
பின்னர் முகேஷ் ஜாவை விட்டு அனிதா சவுத்திரி பிரிந்து வேறு ஒரு நபரை திருமணம் செய்தார். அனிதா சவுத்திரிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இரவு நேரத்தில் அவர் ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தினருக்கு உதவி வந்தார். ரயில்வே நிலையத்திலிருந்து பயணிகளை அழைத்து செல்வதை அவர் வழக்கமாக மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் ரயில் நிலையம் அருகே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை முன்னாள் கணவர் முகேஷ் ஜா கொலை செய்திருக்கலாம் என அனிதாவின் கணவர் மற்றும் அனிதாவின் சகோதரி வினிதா ஆகி யோர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் முகேஷ் ஜாவின் நண்பர்கள் மனோஜ் ஜா மற்றும் சிவம் ஜா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான முகேஷ் ஜாவை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரது கார் பெத்வா நதியின் நாட்காட் பாலம் அருகே நின்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பகவான்புத்ரா மற்றும் கர்கான் சாலையில் முகேஷ் ஜா சென்று கொண்டிருப்பதை போலீஸார் பார்த்தனர்.
அவரை நிறுத்த முயன்றபோது, முகேஷ் ஜா, போலீஸார் மீது தனது கைத்துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் முகேஷ் ஜாவின் காலில் குண்டு பாய்ந்தது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் போலீஸார் சேர்த்துள்ளனர். அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். ‘‘அனிதா சவுத்திரி தன்னைவிட்டு பிரிந்து சென்றதை தாங்கி கொள்ள முடியவில்லை. என்னை அவர் ஏமாற்றியதால், அனிதாவை சுட்டுக் கொன்றேன்’’ என போலீஸாரிடம் முகேஷ் ஜா கூறினார்.