

புதுடெல்லி: ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகி, 40 சதவிகித கமிஷன் பெற்றதாக அதன் பொறியாளர் புகார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள வெள்ளி வியாபாரிகள் சார்பில் அளிக்கப்பட்ட 60 கிலோ வெள்ளி உள்ளிட்ட சில நன்கொடைகளும் மாயமாகி விட்டதாக புகார் கிளம்பியுள்ளது.
உத்தரப்பிரதேசம் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு புகாரில் உபி அரசு எஸ்ஐடி அமைத்துள்ளது. இதன் சார்பிலான விசாரணைத் தொடர்கிறது. இச்சூழலில், ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் பொறியாளர் தீனாநாத் வர்மா ஒரு புதிய புகார் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தீனாநாத் மிஸ்ரா, ‘கோயில் கட்டுவதற்கு முன் அதன் மாடலை செய்துவர நான் கொல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டிருந்தேன். அங்கு பெற்ற குறைவானப் பொருட்களை அதிகம் பெற்றதாக ரசீதுகள் போடப்பட்டன.
இது குறித்து கோயில் கான்ட்ராக்டர்களிடம் கேட்டபோது அவர்கள், அறக்கட்டளை நிர்வாகி அணில் குமார் மிஸ்ராவுக்கு கமிஷன் கொடுப்பதாகத் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையின் குரல் பதிவுகளையும் பொதுச்செயலாளர் சம்பக் ராயிடம் காண்பித்தேன்.
அனைத்தும் நன்கு அறிந்த பின்பும் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பக் ராய் மவுனம் காத்து கமிஷன் பெறுவதை அனுமதித்தார். ஒருமுறை அயோத்திக்கு வருகை தந்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச காப்பாளர் தினேஷ் சந்திராவிடமும் இதை எடுத்துக் கூறினேன்.
இதன்பின் நான் காணிக்கைகள் எண்ணும் பிரிவுக்கு மாற்றப்பட்டேன். அந்த பணிக்கு செல்லும்போது தினமும் எனது கைப்பேசியை சம்பக் ராயின் ஓட்டுநரான ராம் ஷங்கர் யாதவ் வாங்கி வைத்துக் கொள்வார். இதனால், மனம் உடைந்து நான் எனது பிரயாக்ராஜ் வீட்டுக்கு வந்து விட்டேன்.
எனது பொருட்கள் இன்னும் அயோத்தியிலேயே உள்ளன. நான் திரும்பி வந்து விடக் கூடாது என அனில் மிஸ்ராவின் ஆட்கள் என்னை போனில் மிரட்டினர்.’ எனத் தெரிவித்துள்ளார். ராமர் கோயிலுக்கு நன்கொடையாக 60 கிலோ எடையுள்ள வெள்ளி கட்டிகள் அளிக்கப்பட்டன. இவை அகில இந்திய வெள்ளி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒப்படைத்து ரசீதும் பெறப்பட்டுள்ளது. தற்போது இவை மாயமாகிவிட்டதாகப் புகார் கிளம்பியுள்ளது.
இதன் மீது அச்சங்கத்தின் தலைவரான அனுராக் ரஸ்தோகி கூறுகையில், ‘ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிலிருந்தே இந்த வெள்ளி கட்டிகள் காணவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார். இதை, கடந்த ஆறு நாட்களாக காணிக்கை திருட்டை விசாரிக்கும் உபி அரசின் எஸ்ஐடியாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.
இதேபோல், ராஜஸ்தான் ஜோன்பூரின் விஸ்வகர்மா குடும்பத்தினரால் அதிக விலைமதிப்பிற்குரிய நெக்லஸ் மற்றும் சரணப் பாதங்கள் காணிக்கையாக அளிக்கப்பட்டன. இதுவும் காணவில்லை என எஸ்ஐடியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொலைந்துவிட்ட இப்பொருட்கள் குறித்து ராமர் கோயிலின் நான்கு அர்சகர்களிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகிறது.
டாக்டர் அனில் குமார் மிஸ்ராவும் விசாரணக்காக மூன்று மணி நேரம் எஸ்ஐடியிடம் நேரில் ஆஜராகி இருந்தார். காணிக்கை எண்ணும் இடம் உள்ளிட்ட கோயிலில் உள்ள நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமிரா பதிவுகள் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது.
இவற்றை கிளவுட்ஸில் பாதுகாக்க தனியார் நிறுவனம் கேட்ட தொகை அதிகம் என்பதால் அதை அறக்கட்டளை ஏற்க மறுத்து விட்டது. பழைய காட்சிப் பதிவுகளும் இல்லாமல் விசாரணை நடத்துவதும் உபி அரசின் எஸ்ஐடிக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனிடையே, நேற்று முன் தினம் ஒரு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்திக்கு வருகை தந்தார். அப்போது அவர், ‘கோயில் கட்டுவதற்காக 500 வருடங்கள் காத்திருந்தோம். இந்த திருட்டு புகாரில் 15 நாட்கள் காத்திருங்கள் முழு உண்மையும் பக்தர்கள் முன் தெரியவரும்.’ எனத் தெரிவித்துள்ளார்.