சீக்கியர் கலவர வழக்கின் ஆயுள் தண்டனை கைதி சஜ்ஜன் குமார் மரணம்

காங். முன்னாள் எம்.பி மீதான வழக்கின் பின்புலம்
காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார்

காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார்

Updated on
1 min read

புது டெல்லி: 1984-ம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது ஐந்து பேரைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார், டெல்லி மருத்துவமனையில் இன்று (வியாழக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 80.

திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சஜ்ஜன் குமார், உடல்நிலை பாதிக்கப்பட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். அவரது இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.

காங்கிரஸ் சார்பில் அவுட்டர் டெல்லி தொகுதியில் மூன்று முறை மக்களவை உறுப்பினராக இருந்த சஜ்ஜன் குமார், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராகவும் திகழ்ந்தார். 2018-ல் அவர் சீக்கிய கலவர வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகு கட்சியிலிருந்து விலகினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது சீக்கிய பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியாந்த் சிங் ஆகியோரால் 1984-ம் ஆண்டு அக்டோபர் 31 அன்று படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களை குறிவைத்து கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் டெல்லியில் 3,000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தக் கலவரம் தொடர்பான பல குற்றவியல் வழக்குகளை சஜ்ஜன் குமார் எதிர்கொண்டார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 5 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாரை விடுதலை செய்து 2013-ல் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, 2018-ம் ஆண்டு டிசம்பர் 17 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றச் சதி மற்றும் குற்றத்திற்குத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சஜ்ஜன் குமாரை குற்றவாளி என்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தந்தை -மகன் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட மற்றொரு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஜ்ஜன் குமாருக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் 2025ல் ஆயுள் தண்டனை விதித்தது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

1984-ஆம் ஆண்டு கலவரத்தின்போது ஜனக்புரி மற்றும் விகாஸ்புரி பகுதிகளில் வன்முறையைத் தூண்டியதாக தொடரப்பட்ட இரண்டு தனித்தனி வழக்குகளில் இருந்து இந்த ஆண்டு சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார்.

அந்த வழக்குகளில் விடுவிக்கப்பட்டாலும் அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படவில்லை. ஏனெனில், பிற வழக்குகளில் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அவர் தொடர்ந்து அனுபவித்து வந்தார்.

<div class="paragraphs"><p>காங். முன்னாள் எம்.பி&nbsp;சஜ்ஜன் குமார்</p></div>
தென் மாநில முதல்வர்கள் மாநாடு: முதல்வர் விஜய் பேசியது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in