

ரத்னா தேவ்நாத்துக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி. மகளின் உயிரிழப்புக்காக மக்களிடம் நீதி கேட்கும் சபினா யாஸ்மின்.
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்து, நாளை 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் இரு பெண் வேட்பாளர்களின் ஆவேச பிரச்சாரம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெண் மருத்துவர் கொலை: கடந்த 2024-ல் ஆக.9-ம் தேதி மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த 31 வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் கூறியது. மேலும் கொலையை மறைக்க மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு வழிகளைக் கையாண்டது. ஆனால் மேற்குவங்கம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் கொதித்தெழுந்து தொடர் போராட்டங்களை நடத்தினர். இதன்காரணமாக பெண் மருத்துவர் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்பேரில் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. ஆனால் கொலை நடந்த இடத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டு இருந்ததால் சிபிஐ அதிகாரிகளால் முழு உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியவில்லை. இந்த வழக்கில் மேற்குவங்க காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய்க்கு மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவுடன் பலர் வழக்கில் இருந்து தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு அவரது தாய் ரத்னா தேவ்நாத் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அவருக்கு பாஜக ஆதரவுக் கரம் நீட்டியது. தற்போது பனிஹாட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டு உள்ளார். சில நாட்களுக்கு முன்பு ரத்னா தேவ்நாத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது பிரதமர் கூறும்போது, “பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் அனைவரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள்" என்று உறுதி அளித்தார்.
குண்டுவெடிப்பில் சிறுமி.. கடந்த ஆண்டு கலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது ஆளும் கட்சியினர் வெற்றிவிழா ஊர்வலத்தை நடத்தினர். சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் ஒரு குண்டு குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் தமன்னா சாதுன் (9) என்ற சிறுமி உயிரிழந்தார். இந்த சிறுமியின் தாய் சபினா யாஸ்மின், கலிகஞ்ச் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார்.
பிரச்சாரத்தின்போது அவர் கூறும்போது, “வன்முறையை எதிர்த்தும், குழந்தைகளின் பாது காப்பை முன்னிறுத்தியும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எனது மகளை போன்று வேறு எந்த குழந்தையும் கொடூரமாக உயிரிழக்கக்கூடாது. எனது மகளின் உயிரிழப்புக்காக மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு நிற்கிறேன்" என்று தெரிவித்தார்.