

ஹுப்பள்ளி: பிளை 91 ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏடிஆர் ரக விமானம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு புறப்பட்டது. மாலை 4.30 மணிக்கு கர்நாடகாவின் ஹுப்பள்ளியை நெருங்கியதும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியவில்லை.
வானிலை சீரடைவதற்காக அந்த விமானம் கர்நாடகாவின் முந்காட், தேவனகிரி மற்றும் சிவமோகா ஆகிய பகுதிகளில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. விமானம் தரையிறங்காமல் வெகு நேரம் சுற்றியதால் பயணிகள் பீதியடைந்தனர். அப்போது பைலட் ‘‘மோசமான வானிலையால் வானில் தொடர்ந்து பறந்து கொண்டிருக்கிறோம். வானிலை சீரடைந்ததும் தரையிறங்கலாம். இதுகுறித்த தகவலை அவ்வப்போது தெரிவிப்போம். பொறுமையாக இருந்து, விமான ஊழியர்கள் சொல்வதை பின்பற்றவும்’’ என தெரிவித்தார்.
அதற்குள் பதற்றமடைந்த பயணிகள், ‘‘பெங்களூருக்கு செல்லும்படி பைலட்டிடம் கூறுங்கள், அல்லது பெல்ஹாம் போகலாம்’’ என ஒரு பயணி கூறியுள்ளார். ‘‘ஆமாம். பெல்ஹாம் அருகில்தான் உள்ளது’’ என மற்றொரு பயணி கூறினார். ஒன்றரை மணி நேரத்தில் தரையிறங்க வேண்டிய விமானம், தொடர்ந்து 4 மணி நேரத்துக்கு மேல் பறந்ததால் பயணிகள் இடையே அச்சம் அதிகரித்தது. ஒரு பெண் பயணி கைகளை கூப்பி பிரார்த்தனை செய்தபடி அழ ஆரம்பித்தார். அவரது உடல் நடுங்கத் தொடங்கியது.
ஓ.. மை காட் என பல பயணிகள் கூறும் சத்தம் விமானத்துக்குள் எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவானது. அழ வேண்டாம், ஒன்றும் ஆகாது, பொறுத்திருங்கள் என மற்றொருவர் கூறும் சத்தமும் கேட்டது. ஹூப்பள்ளியில் தரையிறங்க விமானம் பல முறை முயன்றும், இறங்க முடியவில்லை. அதனால் அந்த விமானம் கடைசியாக பெங்களூரு திருப்பிவிடப்பட்டு, கெம்பேகவுடா விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 7.30 மணிக்கு தரையிறங்கியது. அதன்பின்பே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதுகுறித்து பிளை 91 ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: ஹைதராபாத்திலிருந்து ஹூப்பள்ளிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு எதுவும் ஏற்படவில்லை. மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் விதிமுறைப்படி பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது. அதன்பின் அந்த விமானம் ஹூப்பள்ளிக்கும், ஹைதராபாத்துக்கும் சென்றது. விமான பைலட்டுகளும், ஊழியர்களும் திறமையானவர்கள், எந்தச் சூழலையும் சமாளிக்கும் திறன் படைத்தவர்கள். எங்கள் விமான நிறுவனம் சிறந்த பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.