

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு அதிகரித்து, 10 மாவட்டங்களில் பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய தென் மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளன. 10 மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடு முறை அளிக்கப்பட்டது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதாலும், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கனமழை தொடரும் என்றும் கடலோர மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் பெரிய அலைகள் எழக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பகல் நேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றைக் கடப்பதையோ அல்லது வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடுவதையோ பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மீட்புப் பணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.