அசாமில் ஏஎன்-32 ரக விமானம் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

அசாமில் ஏஎன்-32 ரக விமானம் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஜோர்ஹட்: அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் விமானப் படைத் தளத்தில் ஏஎன்-32 ரக விமானம் நேற்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர்.

இந்திய விமானப் படையில் வீரர்களின் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு 100-க்கும் மேற்பட்ட ஆன்டனோவ் ஏஎன்-32 ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் 7.5 டன் சரக்குகள் அல்லது 50 வீரர்களை ஏற்றிச் செல்ல முடியும். சோவியத் யூனியன் காலத்தில் இந்திய விமானப் படை தேவைக்காக உருவாக்கப்பட்ட ஏஎன்-32 ரக விமானங்கள் மிகப் பழமையானவை. எனினும் நன்கு செயல்படும் விமானமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று காலை ஏஎன்-32 ரக விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவதற்காக புறப்பட்டு சென்றது. அதில் ஸ்குவார்டன் லீடர் பிரசாந்த் சிங், பிளைட் லெப்டினன்ட் சுபம் குமார், சர்ஜென்ட் ஜிதேந்திர சர்மா மற்றும் அக்னிவீர் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர்ந்த வீரர்கள் கெம்ராம் குமாவத், டேனீஸ் ஆலம் ஆகியோர் பயணம் செய்தனர்.

அந்த விமானம் நேற்று காலை 10 மணியளவில் தரையிறங்குவதற்காக ஜோர்ஹட் விமானப் படை தளத்துக்குத் திரும்பியது. அப்போது விமானம் ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானம் உடனடியாக தீப்பற்றி எரிந்தது. விமானப் படை தளத்தில் இருந்து தீயணைப்பு வீரர்களும், விமானப் படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய விமானப் படை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து துறை ரீதியான விசாரணையை விமானப் படை தொடங்கிஉள்ளது.

2 பைலட்கள் உயிரிழப்பு: அசாம் மாநிலம் ஜோர்ஹட் விமானப் படை தளத்தில் இருந்து கடந்த மார்ச் 5-ம் தேதி வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டு சென்ற சுகோய் போர் விமானம் விபத்துக்கு உள்ளாகியதில் 2 பைலட்டுகள் உயிரிழந்தனர்.

ராஜ்நாத் சிங் இரங்கல்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இவர்கள் அனைவரும் பணியின் போது உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் வீரம், நாட்டுக்கு ஆற்றிய சேவை ஆகியவை எப்போதும் பெருமையுடனும், நன்றியுடனும் நினைவு கூரப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கல்கள். இந்த நேரத்தில் நாடு அவர்களுக்கு துணை நிற்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

அசாமில் ஏஎன்-32 ரக விமானம் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
9 பெண் அதிகாரிகள் பயிற்சி முடித்தது சிறந்த தருணம்: குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in