

பீமாவரம்: ஆந்திராவில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் சாலையில் கிடந்த பையை கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம், மன்டபேட்டா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணம் ராஜு என்பவரின் மகள் ஸ்ரீலேகா, தனது குடும்பத்தாருடன் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக லக்கவரம் கிராமத்துக்கு ஆட்டோவில் சென்றார். திருமண வீட்டுக்குச் சென்ற ஸ்ரீலேகா, தன்னிடமிருந்து ஒரு பையை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மன்டபேட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் பையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் அந்த வழியாக சென்ற விவசாய தொழிலாளி லட்சுமண குமார், அந்தப் பையை கண்டெடுத்துள்ளார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அதில் நகைகளும் ஸ்ரீலேகாவின் ஆதார் அட்டையும் இருந்துள்ளது. இரவு நேரமாகி விட்டதால், மறுநாள் காலை அந்தப் பையை காவல் நிலையம் கொண்டு சென்று ஒப்படைத்தார். இதையடுத்து, நகைகள் இருந்த அந்தப் பையை ஸ்ரீலேகாவிடம் போலீஸார் ஒப்படைத்தனர். லட்சுமண குமாரின் நேர்மையை போலீஸாரும் ஸ்ரீலேகாவும் பாராட்டினர்.