

சிகரெட் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரம்
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் செயல்பட்டு வந்த போலி சிகரெட் தொழிற்சாலையை கண்டுபிடித்த போலீஸார், அங்கிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
பிரபலமான பிராண்டுகளின் பெயர்களில் போலி சிகரெட்டுகள் சந்தைக்கு வந்ததால் விற்பனை பாதிக்கப்பட்டதை அடுத்து, ஒரு சிகரெட் நிறுவனம் ரகசிய விசாரணை நடத்தி காவல்துறையினருக்குத் தகவல் அளித்தது.
அதன்பேரில், மீரட் மாவட்டம் ஹஸ்தினாபூரில் உள்ள துத்லி கிராமத்தில் உ.பி. காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு குறிப்பிட்ட சிகரெட் நிறுவனத்தின் மேலாளர் உதவியாக இருந்துள்ளார். வியாழக்கிழமை இரவு மீரட் ஹஸ்தினாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் இந்த சோதனையை நடத்தினர்.
அப்போது, அங்கு பிரபலமான பிராண்டுகளின் பெயர்களில் போலி சிகரெட்டுகளை தயாரிக்கும் சட்டவிரோத தொழிற்சாலை செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்து பெருமளவிலான போலி சிகரெட்டுகள், மூலப்பொருட்கள், பேக்கிங் பொருட்கள் மற்றும் சிகரெட் தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.
சோதனையின்போது சம்பவ இடத்தில் ஒருவரை கைது செய்த போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்தச் சட்டவிரோத தொழிற்சாலை டெல்லியைச் சேர்ந்த ரவி என்பவருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. தொழிற்சாலையிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட பொருட்களின் உண்மையான மதிப்பு, விசாரணை முடிந்த பின்னரே கணக்கிடப்படும். எனினும், இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்,” எனக் கருதப்படுகிறது.