

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) கூடுதல் ஊழியர்களை நியமிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) ரத்து செய்யக் கோரி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.செல்வபெருந்தகை, புதுச்சேரி திமுக அமைப்பாளர் ஆர்.சிவா, மனித நேய மக்கள் கட்சின் தலைவர் எம்.எச்.ஜவஹருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பி.சண்முகம், மனிதநேய மக்கள் கட்சியின் தமிமூன் ஹன்சாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல் திருமாவளவன், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், பிஹார், மேற்கு வங்க மாநிலங்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்த மனுக்களுடன், எஸ்ஐஆரை தள்ளி வைக்க கோரும் கேரள அரசு மனுவுடன் தமிழக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் எஸ்ஐஆர் பணிக்கு ஏன் ஒரு மாதம் கெடு விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் ஆஜராகி, தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. எஸ்ஐஆர் பணியை செய்ய தவறும் ஊழியர்களுக்கு எதிராக மட்டுமே தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்கிறது என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தலைமை நீதிபதி, மாநில அரசு தனக்குள்ள கடமையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதுடன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணி நேரத்தை குறைக்க கூடுதல் ஊழியர்களை நியமிப்பதை மாநில அரசுகள் பரீசிலிக்க வேண்டும்.
எஸ்ஐஆர் பணியிலிருந்து விலக்களிக்க கோரும் ஊழியர்களின் கோரிக்கையை தனித்தனியாக தேர்தல் ஆணையமும், மாநில அரசும் பரிசீலித்து, அவர்களுக்கு பதிலாக வேறு ஊழியரை பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.