டெல்லி, பிஹார், ஆந்திராவில் மாலை நேர நீதிமன்றங்கள் - மத்திய அரசு நடவடிக்கை

தேங்கி உள்ள வழக்குகளை முடிக்க திட்டம்
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால்

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால்

Updated on: 
1 min read

புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் பல லட்சம் வழக்குகள் பல வருடங்களாகத் தேங்கியுள்ளன. இவற்றை முடிக்க டெல்லி, பிஹார், ஆந்திராவில் மாலைநேர நீதிமன்றங்கள் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின்படி, வழக்கமான பகல் நேரங்களில் செயல்படும் நீதிமன்றங்கள், மாலை வேளையிலும் கூடுதல் நேரங்களுக்கு செயல்படும். இவற்றில், நிலுவையில் உள்ள வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு முடித்து வைக்கப்படும். மாலை நேர அமர்வுகளை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளைப் பணியமர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் ஓர் ஆங்கில நாளேட்டிற்கு அளித்தப் பேட்டியில், “சில உயர் நீதிமன்றங்களுடன் இணைந்து, முன்னோடித் திட்டமாக மாலை நேர நீதிமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது ஒரு முக்கிய முன்னெடுப்பாகும். இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஈடுபடுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

சோதனை அடிப்படையில் இந்த மாலை நேர நீதிமன்றங்கள் மூன்று மாநிலங்களில் மட்டும் தொடங்கப்பட உள்ளன. இதில், டெல்லி, பிஹார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த உத்தியைக் கையாளத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மேலும் கூறுகையில், “வழக்கமான பகல் நேரங்களில் இயங்கும் நீதிமன்றங்கள், மாலை வேளையில் கூடுதல் நேரம் செயல்பட்டு, வழக்குகளை விசாரித்து அவற்றை விரைந்து முடிக்கும் வகையில் இந்த ஏற்பாடு அமையும். முதற்கட்டமாக, பிஹார், டெல்லி மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த முன்னோடித் திட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் செயல்பாடுகளை மதிப்பீடு செய்த பிறகு, மற்ற மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிப்போம்.

‘லோக் அதாலத்துகள்’ மூலமாகவும் வழக்குகளைத் தீர்த்து முடிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மற்றொரு முக்கிய அம்சம் ‘மாற்றுச் சிக்கல் தீர்வு’ முறையாகும். இதில், நடுநிலையான மூன்றாம் தரப்பினர், தகராறில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தவும், இரு தரப்புக்கும் ஏற்புடைய தீர்வை எட்டவும் உதவுகின்றனர்.

இந்த நடைமுறை, நீதிமன்றங்களின் பணிச்சுமையைக் குறைக்க உதவும். நாங்கள் ‘முன்-மத்தியஸ்தம்’ குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம். இது வழக்குகளை நீண்டகால சட்ட நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லும் முன்பே அவற்றைச் சுமூகமாகத் தீர்க்க உதவும்.” என்று கூறியுள்ளார்.

மாலைநேர நீதிமன்றங்கள் முன்னெடுப்பு, அந்தந்த உயர் நீதிமன்றங்களுடன் இணைந்து விரைவில் தொடங்கப்பட உள்ளது.

<div class="paragraphs"><p>மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால்</p></div>
தங்கம் விலை கிராம் ரூ.13,000-க்கும் கீழ் சரிந்தது: 5 காரணங்களை அடுக்கும் சந்தை வல்லுநர்கள்

X