“சமூகத்தை ஒன்றிணைக்க பொது சிவில் சட்டம் அவசியம்” - மோகன் பாகவத்

“சமூகத்தை ஒன்றிணைக்க பொது சிவில் சட்டம் அவசியம்” - மோகன் பாகவத்
Updated on
1 min read

தெஹ்ராதூன்: சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு நாடு தழுவிய அளவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது இன்றியமையாதது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேக சங்கத்தின்(ஆர்எஸ்எஸ்) 100வது ஆண்டின் நிறைவைக் குறிக்கும் வகையில், முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி உத்தராகண்ட்டின் தெஹ்ராதூன் நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மோகன் பாகவத், ‘‘சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு நாடு தழுவிய அளவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது இன்றியமையாதது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது மிகவும் நல்லது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால் நல்லது. உத்தராகண்ட்டில் எவ்வாறு பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டதோ அதே வழியில், நாடு முழுவதற்கும் அது செயல்படுத்தப்பட வேண்டும்’’ என தெரிவித்தார்.

உத்தராகண்ட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமாக உத்தராகண்ட் உள்ளது. ‘‘வரைவு பொது சிவில் சட்டம் உத்தராகண்ட்டில் பொது விவாதத்துக்கு கொண்டுவரப்பட்டு, 3 லட்சம் மக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டன’’ என மோகன் பாகவத் கூறினார்.

உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் யுஜிசி கொண்டுவந்த விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மோகன் பாகவத், ‘‘இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே, கருத்து சொல்வது சரியல்ல’’ என தெரிவித்தார்.

‘‘நாடு சுதந்திரமாக இருந்தாலும் சுதந்திரத்தைப் பாதுகாக்க பாதுகாப்புப் படைகள் எப்போதும் தேவை. ஆர்எஸ்எஸ் எந்த வெளிப்புற வளங்களும் இல்லாமல் நிறுவப்பட்டது. இரண்டு முறை கடுமையான தடைகளை எதிர்கொண்ட போதிலும், அது சமூகம் அளித்த தன்னம்பிக்கையின் பலத்தில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் அர்ப்பணிப்பு பணிகளை கவனிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்களின் ஆர்வம் மற்றும் திறமைக்கு ஏற்ப சேவைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.

“சமூகத்தை ஒன்றிணைக்க பொது சிவில் சட்டம் அவசியம்” - மோகன் பாகவத்
ஈரானை தாக்குவது ஆபத்தானது என அமெரிக்க ராணுவத் தளபதி எச்சரித்தாரா? - ட்ரம்ப் விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in