

லக்னோ: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியது மற்றும் சட்டவிரோத ஊடுருவலுக்கு உடந்தையாக இருந்தது தொடர்பான பண மோசடி வழக்கில், நாட்டின் 4 மாநிலங்களில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த வெளிநாட்டினரை இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவச் செய்வது, அவர்களுக்கு போலி இந்திய அடையாள ஆவணங்களைத் தயாரித்துத் தருவது மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் குடியேற சட்டவிரோதமாக உதவுவது ஆகிய வற்றில் ஒரு தேச விரோத கட்டமைப்பு செயல்பட்டு வருவதை உ.பி. தீவிரவாத எதிர்ப்புப் படை கண்டறிந்தது. இதையடுத்து, கடந்த 2024ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில தீவிரவாத எதிர்ப்புப் படை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் இதுதொடர்பான வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது.
இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: சில குறிப்பிட்ட தொண்டு அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து கணிசமான அளவில் பங்களிப்புகளைப் பெற்றுள்ளன. அவ்வாறு பெறப்பட்ட வெளிநாட்டு நிதி, பல்வேறு வங்கிக் கணக்குகள், பினாமி கணக்குகள் மற்றும் பல அடுக்கு பரிவர்த்தனைகள் மூலம் மடைமாற்றப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சட்டவிரோதப் பணப்பரிமாற்றங்கள் மற்றும் தீவிரவாத நிதி உதவி நெட்வொர்க்கை முழுமையாக முடக்கும் நோக்கில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் கணினித் தரவுகளின் அடிப்படையில், இந்தச் சதித்திட்டத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளைக் கண்டறியும் நோக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையின் லக்னோ மண்டல அலுவலக அதிகாரிகள், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள சுமார் 13 முக்கிய இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.