

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ல் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 25,753 பேர் நியமிக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 2022-ல் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியது. அதே ஆண்டில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை விசாரணை தொடங்கியது.
தகுதியான நபர்களை புறக்கணித்துவிட்டு, லஞ்சம் கொடுத்த நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது.
இந்த ஊழல் மூலம் திரட்டப்பட்ட பணம் எங்கு சென்றது, யார் யாரெல்லாம் அதைப் பெற்றார்கள், அந்தப் பணத்தை மறைக்க அல்லது வேறு கணக்குகளுக்கு மாற்ற என்னென்ன வழிகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய இரு அமைப்புகளும் தீவிரமாக விசாரிக்கின்றன.
இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியது. கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் அவரிடம் நீண்ட விசாரணை நடத்தினர்.
மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான ஆவணங்களில், எம்எல்ஏ-க்களின் போலி கையெழுத்துகளை பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அபிஷேக் பானர்ஜியிடம் மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் நேற்று முன்தினம் சுமார் எட்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இதற்கு அடுத்த நாளே அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
இந்த ஊழல் தொடர்பாக கடந்த 2022 ஜூலை 23-ம் தேதி நடந்த சோதனையில் மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் இல்லத்தில் இருந்து ரூ.50 கோடிக்கு மேல் ரொக்கப் பணம், ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் தற்போது வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.