

குறியீட்டுப் படம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும் பணிகள் மற்றும் வாக்குப்பதிவு ஒத்திகைப் பணிகளை தொடங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.
துணை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதல் நிலை சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போதுமான எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளனவா, விவிபாட்கள் உள்ளனவா என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் இரண்டுமே போதுமான எண்ணிக்கையில் உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது 80,681 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில், இம்முறை கூடுதலாக சுமார் 15,000 வாக்குச் சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 95,000 ஆக இருக்கும். அதேநேரத்தில், மேற்கு வங்க தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தற்போது 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளதாகவும 1.35 லட்சம் விவிபாட்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன் எப்போதும் இல்லாத வகையில், முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் புகைப்படங்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு அருகில் இந்த புகைப்படங்கள் வைக்கப்படும் என்றும், பயிற்சியின்போது இது காட்டப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இன்று ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயிற்சி முறையில் சோதனை செய்ய உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மொத்தம் 6 வாக்களிப்பு பொத்தான்கள் (பட்டன்கள்) இருக்கும். ஒவ்வொரு பொத்தானும் 16 முறை சோதிக்கப்படும். இதன்மூலம், ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தான்கள் 96 முறை சோதிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதிப்பதற்கான பயிற்சியை, கொல்கத்தாவில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தி நிறுவனமான இசிஐஎல் நிறுவனத்தின் பொறியாளர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு அளிப்பார்கள்.
இந்த சோதனையின் மூலம், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சரியாக வேலை செய்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படும். மேலும், வாக்குச் சீட்டு கட்டுப்பாட்டு அலகு (விவிபாட்) சரியாக உள்ளதா என்பதும் உறுதிப்படுத்தப்படும்.
மேற்கு வங்கம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் இந்த பணிகளை நிறுத்துமாறு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளும் அம்மாநிலத்தில் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.