

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தன் லக்ரா. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் அங்குள்ள ஜார்க்கண்ட் கிராமீன் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார். மேலும் அரசிடமிருந்து வரும் பென்ஷன் பணமும் அந்த வங்கிக் கணக்கிலேயே சேர்ந்து வந்தது.
இந்நிலையில் ரத்தன் லக்ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெறுவதற்கு பணம் தேவைப்பட்ட நிலையில் ரத்தன் லக்ராவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து வந்துள்ளனர். ஆனால் கேஒய்சி விவரங்களை (வாடிக்கையாளர் சுயவிவரக்குறிப்பு) அப்டேட் செய்யாததால் பணத்தை எடுக்க முடியாது என்று வங்கி மேலாளர் தெரிவித்து விட்டார்.
இதையடுத்து ரத்தன் லக்ராவின் கேஒய்சி விவரங்களுக்கான ஆவணங்கள் தரப்பட்டன. ஆனால் அப்போதும் பணம் அவருக்கு தரப்படவில்லை. இந்நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரத்தன் லக்ரா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து கோபமடைந்த அவரது உறவினர்கள் ரத்தன் லக்ராவின் சடலத்துடன் வங்கி வளாகத்துக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிகிச்சைக்கு பணம் இல்லாத நிலையில் தரமான சிகிச்சை வழங்க இயலவில்லை. வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் ரத்தன் இறந்துவிட்டார் என அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து ரத்தன் மருமகள் புல்மனி டாப்போ கூறும்போது, “எங்கள் மாமனாரின் பணத்தை வாங்குவதற்காக இந்த வங்கியின் ஒவ்வொரு அதிகாரியிடமும் கையெழுத்து வாங்கினோம். அந்த ஆவணம் கொடு, இந்த ஆவணம் கொடு என்று எங்களை அலைய வைத்தனர். கேஒய்சி விவரங்கள் கொடுத்த பின்னரும் பணம் தராமல் இழுத்தடித்தனர். தரமான சிகிச்சை கிடைக்காமல் அவர் இறந்துவிட்டார்” என்றார்.
இதுகுறித்து வங்கி அதிகாரி விகாஸ்குமார் கூறும்போது, “கேஒய்சி விவரங்களை பெற்ற பின்னர் ரத்தன் உறவினர்கள் யாரும் வங்கிக்கு வரவில்லை. அவர் இறந்த பின்னரே வந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்” என்றார்.