

புதுடெல்லி: இந்தியாவில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட சூதாட்ட செயலிக்கு ஆதரவாக ஊடகங்களில் விளம்பரம் செய்த கிரிக்கெட் வீரர்கள்யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, நடிகைகள் மிமி சக்ரவர்த்தி, நேகா சர்மா, நடிகர்கள் சோனு சூட், அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரது ரூ.7.93 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
சை்ரஸ் நாட்டை சேர்ந்த ‘1 எக்ஸ் பெட்’ என்ற சூதாட்ட செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த செயலி சட்டவிரோதமாக இந்தியாவில் கால் பதித்தது. இதன் விளம்பர தூதர்களாக இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களது கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏராளமான இந்தியர்கள் இந்த செயலியில் பெரும் தொகையை இழந்தனர். இந்த செயலி வாயிலாக இந்தியாவில் சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், சூதாட்ட செயலிக்கு ஆதரவாக விளம்பரம் செய்த நட்சத்திரங்களிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, மேற்குவங்க நடிகை மிமி சக்ரவர்த்தி, பாலிவுட் நடிகை நேகா சர்மா, பாலிவுட் நடிகர் சோனு சூட், மேற்கு வங்க நடிகர் அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரிடம் கடந்த பல மாதங்களாக தீவிரவிசாரணை நடத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் அவர்களது ரூ.7.93 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதே வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் மாதம் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவண், சுரேஷ் ரெய்னா ஆகியோரது ரூ.11.14 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன. இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான ரூ.1 கோடி சொத்துகள், மிமி சக்ரவர்த்தியின் ரூ.59 லட்சம், யுவராஜ் சிங்கின் ரூ.2.50 கோடி, நடிகை நேகா சர்மாவின் ரூ.1.26 கோடி, ராபின் உத்தப்பாவின் ரூ.47 லட்சம், மேற்குவங்க நடிகர் அங்குஷ் ஹஸ்ராவின் ரூ.47 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. நடிகை ஊர்வசி ரவுடேலாவின் தாய்க்கு சொந்தமான ரூ.2.02 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் விரிவாக விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, ‘‘இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட செயலிக்கு பலர் அடிமையாகி தங்களது வாழ்நாள் சேமிப்பை இழக்கின்றனர். இந்த விவகாரத்தில் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் மட்டும் ஆன்லைன் செயலிகளால் சுமார் 45 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.20,000 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இத்தகைய செயலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.