

புதுடெல்லி: தற்காலிக கிளர்ச்சி தரும் போதை இளைஞர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சீரழித்துவிடும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கின் ஒருபகுதியாக, போதையில்லா பாரதத்துக்கான இளைஞர் உறுதிமொழி பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது என்பதை நன்கு உணர்ந்துள்ள எதிரி நாடுகள், தங்களின் தீவிரவாதச் செயல்களின் ஒருபகுதியாக போதைப்பொருள் விநியோகத்தைப் பயன்படுத்தி அவர்களை அழிக்கும் வேலையில் ஈடுபடுகின்றன.
போதைப்பொருள் உங்களுக்குச் சிறிது நேரக் கிளர்ச்சியைத் தரலாம்; ஆனால் அது உங்களின் ஒட்டுமொத்த தொழில், வாழ்க்கையை அடியோடு சீரழித்துவிடும். 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை அடைய, நமது இளைஞர்கள் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.
போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வெளியே வருபவர்கள் உண்மையான போராளிகள். அவர்களை அவமானப்படுத்தாமல் கவுரவித்து வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை வழங்க வேண்டும். போதைப் பழக்கம் ஒரு தாயின் புன்னகையைப் பறிக்கிறது; தந்தையின் கனவுகளைத் தகர்க்கிறது; சகோதரியின் நம்பிக்கையைத் தளர்த்துகிறது. தன் கண் முன்னேயே குழந்தை சீரழிவதைப் பார்த்து ஒவ்வொரு குடும்பமும் இந்த வலியை அனுபவிக்கிறது.
போதைக்கு அடிமையான பிள்ளைகளை மறைக்காமல், அவர்களிடம் திறந்தமனதுடன் பேசி, மருத்துவ உதவிகளைப் பெற்றுத்தர குடும்பத்தினர் முன்வர வேண்டும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் அடுத்த 100 வாரங்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கலை, விளையாட்டு, தியானம், ஆன்மீகம், சேவை சார்ந்த பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்படும். வரவிருக்கும் 100 ஞாயிற்றுக்கிழமைகளும் போதையில்லா இந்தியாவை நோக்கி வைக்கப்படும் 100 வலுவான அடிகளாக அமையும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.