தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பாஜக கூட்டணிக்கு ‘பலம்’ இருக்கிறதா?

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பாஜக கூட்டணிக்கு ‘பலம்’ இருக்கிறதா?
Updated on
1 min read

புதுடெல்லி: தொகுதி மறு​வரையறை தொடர்​பான 3 மசோ​தாக்​கள் மீது இன்று நாடாளுமன்றத்தில் வாக்​கெடுப்பு நடத்​தப்பட உள்​ளது. இவற்றை நிறைவேற்ற மூன்றில் 2 பங்கு ஆதரவு தேவை எனும் நிலையில், பாஜக கூட்டணிக்கு பலம் இருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.

கடந்த 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்றப்பட்​டது. இதன்​படி நாடாளு​மன்​றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்​கள் ஒதுக்​கப்பட வேண்​டும். மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த மக்களவை​யில் தற்​போதுள்ள 543 இடங்களை, 850 ஆக அதி​கரிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்டுள்​ளது.

இதற்​காக நாடாளு​மன்​றத்​தின் சிறப்​புக் கூட்​டம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்களவை​யில் அறி​முகம் செய்​யப்பட்டன.

இந்த 3 மசோ​தாக்​களுக்​கும் காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று நாடாளுமன்றத்தில் வாக்​கெடுப்பு நடத்​தப்பட உள்​ளது. இந்த மசோ​தாக்​களை நிறைவேற்ற மூன்​றில் இரண்டு பங்கு எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை.

மக்​களவை​யின் மொத்த பலம் 543 ஆகும். இதில் 3 இடங்​கள் காலியாக உள்​ளன. தற்​போது 540 எம்​.பி.க்​கள் மட்​டுமே உள்​ளனர். இதில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 எம்.​பி.க்​களின் ஆதரவு உள்​ளது. எதிர்க்கட்சிகளிடம் 233 எம்.​பி.க்கள் உள்​ளனர்.

மூன்​றில் இரண்டு பங்கு ஆதர​வின் அடிப்​படை​யில் மக்​களவை​யில் மசோ​தாக்​களை நிறைவேற்ற 360 எம்​.பி.க்களின் ஆதரவு தேவை. தற்​போதைய சூழலில் பாஜக கூட்​ட​ணிக்கு போதிய பெரும்பான்மை இல்​லை.

மாநிலங்​களவை​யின் மொத்த பலம் 245. இதில் ஓர் இடம் காலி​யாக உள்​ளது. அவை​யில் 244 எம்.​பி.க்​கள் மட்டுமே உள்​ளனர். இதில் பாஜக தலை​மையி​லான தே.ஜ. கூட்​ட​ணிக்கு 141 எம்.​பி.க்​கள் உள்ளனர். எதிர்க்​கட்​சிகளிடம் 83 எம்.​பி.க்​கள் உள்​ளனர்.

மூன்​றில் இரண்டு பங்கு ஆதரவு என்ற வகை​யில் மசோ​தாக்​களை நிறைவேற்ற 163 எம்.​பி.க்​களின் ஆதரவு தேவை. மசோ​தாவை நிறைவேற்​றும் அளவுக்கு மாநிலங்​களவை​யிலும் பாஜக​வுக்கு பெரும்​பான்​மை இல்லை.

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பாஜக கூட்டணிக்கு ‘பலம்’ இருக்கிறதா?
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in