

புதுடெல்லி: உ.பி.யில் வளர்ப்பு நாய் இறந்த கவலையில் பட்டதாரிகளான இரு சகோதரிகள் தற்கொலை செய்துகொண்டனர்.
லக்னோவின் ஜலால்பூர் பகுதியில் உள்ள தோதா கிராமத்தில் ராதா சிங் (24), ஜியா சிங் (22) எனும் சகோதரிகள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்கள் சிறுவயது முதல் டோனி எனும் பெயரில் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாயை வளர்த்து வந்தனர். இதன் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தனர். இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன் டோனி நோய்வாய்ப்பட்டு இறந்தது.
அப்போது முதல் சகோதரிகள் இருவரும் சோகத்தில் மூழ்கினர். இதன் உச்சமாக நேற்று இருவரும் பினாயில் திரவத்தை குடித்தனர். இதையடுத்து இருவரும் ராணி லட்சுமிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ராதா உயிரிழந்தார். ஜியா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
உடல்நலம் குன்றிய டோனிக்கு தொடக்கத்தில் இருந்தே சிகிச்சை அளித்தும் அதன் நிலைமை மேம்படவில்லை. இது அவர்களை மன அழுத்தத்தில் ஆழ்த்தியது. இதில் இளைய சகோதரியான ஜியா சிங் முதலில் மனநலம் பாதிக்கப்பட்டார். டோனி இறந்த பிறகு ராதாவும் மனச்சோர்வு அடைந்தார். நாயின் இறப்பால் பொதுச் சமூகம் மற்றும் குடும்பத்திடமிருந்து முற்றிலுமாக விலகி, இருவரும் தனிமையில் வாழ்ந்து வந்தனர்.
இதுகுறித்து சகோதரிகளின் தந்தை கைலாஷ் சிங் (65) கூறுகையில், ‘‘டோனி உயிருடன் இருக்கும்போதே அது உணவருந்தாத நாளில் இருவரும் உணவருந்தவில்லை. அது இறந்த பிறகு இருவரும் வீட்டில் தனி அறையில் வாழ்ந்தனர். யாரிடமும் பேசுவதை நிறுத்தி விட்டனர். செல்போனும் பயன்படுத்தவில்லை.
இதுபோன்ற பழக்கத்தால் அவர்களுக்கு பேய், பிசாசு பிடித்திருக்கும் என்ற சந்தேகமும் வந்தது. இதற்காக மருத்துவமனைக்கும் மந்திரவாதிகளிடமும் அழைத்துச் சென்றும் பலனில்லை” என்றார்.
இந்த சம்பவத்தை காவல்துறை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. வளப்பு நாய்க்காக உயிர்விட்ட பட்டதாரி சகோதரிகள் என சமூக வலைதளங்களிலும் இத்தகவல் வைரலாகி வருகிறது.