

புதுடெல்லி: அச்சம், பதற்றம் இன்றி நீட் தேர்வை எதிர்கொள்ளுமாறு மாணவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுரை வழங்கி உள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு நாடு முழுவதும் இன்று மதியம் நடைபெறுகிறது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், நீட் மறு தேர்வை முன்னிட்டு டெல்லயில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், அச்சம், பதற்றம் இன்றி நீட் தேர்வை எதிர்கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். “இளநிலை நீட் மறுதேர்வு இன்று நடைபெற உள்ளது. தேசிய தேர்வு முகமை, அனைத்து மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், இந்திய கல்வித் துறை ஆகியவற்றின் மீது இந்திய மாணவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
விரைவில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர். அச்சம் இன்றியும் கவலை இன்றியும் தேர்வை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக சிறப்பாக எழுதுவீர்கள். இதுவே மாணவர்களுக்கு நான் தெரிவிக்கும் வாழ்த்து. மாணவர்களுக்கு இந்தியாவின் அமைப்பு மீது நம்பிக்கை உள்ளது. அது தொடர்ந்து இருக்கும். இந்த அசைக்கமுடியாத நம்பிக்கை மட்டும் நிலைத்திருக்கட்டும்.
இந்த தருணத்தில் ஒரு பெற்றோராகவும், சமூக ஆர்வலராகவும் நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் புதிய தலைமுறையின் எதிர்காலத்தைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள். மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் எதையும் நாம் செய்யக்கூடாது. இன்னும் சில மணி நேரங்களில் மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர். அவர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் எதையும் செய்யக்கூடாது.
இந்தியாவில் பொறுப்பானவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சிலர் கடந்த காலங்களில் இத்தகைய நடத்தையை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்கள் மறைமுக நோக்கங்களுடனும் தீய எண்ணங்களுடனும் மாணவர்களை அணுகினர். நீங்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்தால், தயவு செய்து பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு எந்த துன்பத்தையோ, சிரமத்தையோ ஏற்படுத்தாதீர்கள். இதுவே நாங்கள் வைக்கும் கோரிக்கை" என தெரிவித்துள்ளார்.