

புதுடெல்லி: டெல்லியில் 7-வது நாளாக இன்றும் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் விமானப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து இன்றும் பாதிப்புக்கு உள்ளானது.
இன்று (டிச.22) காலை 7:05 மணிக்கு டெல்லியில் சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) 366 ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லி நகரின் பல இடங்களில் காற்று மாசுபாடு அளவு 'கடுமையான' பிரிவில் இருந்தது. நரேலாவில் காற்று தரக் குறியீடு 418 ஆக பதிவு செய்யப்பட்டது.
ஆனந்த் விஹார், பவானா, ஜஹாங்கீர்புரி, முண்ட்கா, ரோஹினி மற்றும் வஜிர்பூர் போன்ற பகுதிகளிலும் 401 முதல் 408 வரையிலான 'கடுமையான' ஏக்யூஐ அளவுகள் பதிவு செய்யப்பட்டன.
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காட்சித் தெளிவின்மை காரணமாக, விமானப் பயணிகளுக்கான அறிவுறுத்தலை விமான நிலையம் வெளியிட்டது. திங்கட்கிழமை இதுவரை டெல்லி விமான நிலையத்தில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.
மேலும், புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, அதே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரு நாட்களுக்கு கடும் பனிமூட்டம் இருக்குமென முன்னறிவித்திருந்தது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 21 டிகிரி செல்சியஸ் மற்றும் 9 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் தெரிவித்தது.