

புதுடெல்லி: டெல்லியில் கிழிந்த ரூ.10 நோட்டை வாங்க மறுத்த டெலிவரி ஊழியரை வாடிக்கையாளர் தாக்கிய சம்பவத்தில், விஷம் குடித்த 23 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏழையாக இருப்பதால் அவமதிப்பதா? எனக் கூறி வீடியோ வெளியிட்டு உள்ளார்.
டெல்லியில் உள்ள ஃபிளிப்கார்ட் மினிட்ஸ் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வந்த சமீர் ஹுசைன், கடந்த 4-ம் தேதி இரவு கிழக்கு டெல்லியின் வினோத் நகரில் ராம்பால் சிங் என்பவருக்கு ஆர்டரை வழங்கச் சென்றுள்ளார்.
அப்போது, வாடிக்கையாளர் கொடுத்த கிழிந்த ரூ.10 நோட்டை வாங்க மறுத்துள்ளார். இதனால் வாடிக்கையாளர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சமீர் ஹுசைன் தாக்குதல் சம்பவம் நடந்த மறுநாளான 5-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 20-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக, இந்தச் சம்பவம் குறித்து சமீர் ஹுசைன் வெளியிட்ட காணொலியில் கூறியிருப்பதாவது: டெல்லியின் வினோத் நகரில் வசிக்கும் ராம்பால் சிங்
என்பவர் ஆர்டர் செய்த ரூ.150 மதிப்பிலான காபியை விநியோகம் செய்ய அவரது வீட்டுக்குச் சென்றேன். அப்போது, ஆர்டருக்கான பணத்தை கொடுத்தார். அதில் இருந்த கிழிந்த ஒரு ரூ.10 நோட்டை மாற்றித் தருமாறு கேட்டேன். நான் அவரிடம் மரியாதையாக, ‘மாமா, தயவுசெய்து இந்த நோட்டை மாற்றித் தாருங்கள்’ என்று கூறினேன். ஆனால், அவர் ‘என்னிடம் இதுதான் இருக்கிறது. வேண்டுமானால் வாங்கிக்கொள்;
இல்லையென்றால் இங்கிருந்து சென்றுவிடு’ என்று கூறி என்னை மூன்று முறை கன்னத்தில் அறைந்தார். நான் பதிலுக்கு எதுவும் செய்யவில்லை. இருப்பினும், எனது ஏழ்மை நிலையைச் சுட்டிக்காட்டி அவமதித்தது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.
சுயமாக உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதால் தந்தையிடம் ஒருபோதும் பணம் கேட்டதில்லை. என்னிடம் பணம் இல்லாததால் தனக்கு நீதி கிடைக்காது என அஞ்சுகிறேன். நடுரோட்டில் எனது சுயமரியாதை ஏற்கனவே சிதைக்கப்பட்டுவிட்டது. அதனால், நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்.
ஏழையாக இருப்பதால்தான் வாழ்நாள் முழுவதும் அவமதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. நான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்தும் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை” என கூறியுள்ளார்.